இஸ்ரோவின் ககன்யான் உள்ளிட்ட முக்கிய விண்வெளித் திட்டங்களில் பணியாற்றி வந்த 100-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் சமீப காலத்தில் ராஜினாமா செய்தது அல்லது பணியிலிருந்து விலகும் நடவடிக்கையில் இருப்பதைத் தொடர்ந்து, விண்வெளித் துறை (DoS) புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்பட்ட உள்துறை சுற்றறிக்கையில், முக்கிய திட்டங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகள் தன்னார்வ ஓய்வு அல்லது ராஜினாமா கோரும் மனுக்களை வழக்கம்போல் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட தகவலின்படி, சுமார் 100 முதல் 120 விஞ்ஞானிகள் வரை பணியிலிருந்து விலகியுள்ளனர் அல்லது விலகும் நிலையில் உள்ளனர். இதில் பெங்களூருவில் உள்ள யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தைச் சேர்ந்த சுமார் 80 பேரும், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைச் சேர்ந்த குறைந்தது 20 பேரும் அடங்குவதாக கூறப்படுகிறது.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் எல்விஎம்-3 (LVM-3) திட்ட இயக்குநராக இருந்த விக்டர் ஜோசப் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஸ்பேடெக்ஸ் (SpaDeX) திட்ட இயக்குநர் மற்றும் சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றிய இளம் திறமையான விஞ்ஞானி ஒருவரும் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் கூறுகையில், “விஞ்ஞானிகள் விலகுவது எந்த நிறுவனத்திலும் நடைபெறும் இயல்பான விஷயம்தான். ஆனால் முக்கிய திட்டங்கள் திடீரென பாதிக்கப்படாமல் இருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் விலகினாலும், அவரது பொறுப்பை மற்றொருவர் ஏற்றுக்கொள்வார். நிலைமையை நாங்கள் கவனித்து வருகிறோம்” என்றார்.
புதிய உத்தரவின்படி, ககன்யான் மற்றும் பிற முக்கிய திட்டங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகளின் ராஜினாமா அல்லது தன்னார்வ ஓய்வு கோரிக்கைகளை அந்தந்த மைய இயக்குநர்கள் நேரடியாக அனுமதிக்க முடியாது. திட்டம் நிறைவடையும் வரை அவற்றை நிறுத்தி வைத்து, தங்களது பரிந்துரைகளுடன் விண்வெளித் துறைக்கு அனுப்ப வேண்டும். இறுதி முடிவை விண்வெளித் துறையே எடுக்கும்.
இதன் மூலம், 2020-ஆம் ஆண்டு இஸ்ரோ மைய இயக்குநர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ராஜினாமா மற்றும் தன்னார்வ ஓய்வு அனுமதி வழங்கும் அதிகாரம், முக்கிய திட்டங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கு இனி பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.