கோவை: கோவை டவுன்ஹாலில் உள்ள சக்திமிக்க பிரபல அம்மன் கோவிலான, கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதல்வர், தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசுதான் என திமுகவை கடுமையாக சாடினார்.
தமிழக தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. தமிழக முதல்வர் ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்ட நிலையில், இன்று கோவையில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதற்காக நேற்று இரவு கோவை வந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, இன்று காலை தேர்தல் பிரசாரத்தை துவங்குவதற்கு முன்னதாக கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு கோவில் பூசாரிகள் சார்பில் சாமியின் உருவப்படம் வழங்கப்பட்டது. உடன் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் கே. அர்ச்சுனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து கோவை ராஜவீதி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. அங்கு பொதுமக்களிடையே பேசிய முதல்வர், திமுக குடும்பத்திற்காக வாழும் தலைவரை பெற்றது. குடும்ப நலனே அவர்களுக்கு பெரிது. ஆனால் அதிமுகவில் மக்களுக்காக தொண்டு ஆற்றும் தலைவர்கள் உள்ளனர். அதிமுகவை பொறுத்தவரையில் மக்கள் தான் முதல்வர்; இது தான் நமக்கு பெருமை. ஆனால் திமுகவை பொறுத்தவரை முதல்வர் பதவி ஸ்டாலினின் கனவு, அதிமுக அரசையும், கட்சியையும் விமர்சிப்பது தான் தி.மு.க.வின் திட்டம் என்று கூறிய முதல்வர், அதிமுக ஆட்சியை கலைக்க முற்பட்டார் ஸ்டாலின். ஆனால் நாங்கள் அதனை முறியடித்தோம் என விமர்சித்தவர், ஸ்டாலினிடம் கேள்வி எழுபபிய , அப்பாவி பெண்ணை திட்டமிட்டு தி.மு.க.வினர் தாக்கி உள்ளனர் என்றும் குற்றஞ்சாட்டியவர், கடந்த முறை தி.மு.க. கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பினார்.
இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக அரசுதான் என்று குற்றம் சாட்டிய முதல்வர், மக்களுக்கு நன்மை செய்வதற்காக அல்லாமல் அதிமுகவை விமர்சிப்பதற்காகவே திமுக கிராம சபை கூட்டங்கள் நடத்துகிறது என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிரசாரம் மக்களை திசை திருப்பும் நாடகம் என்றவர், 2011-ம் ஆண்டுக்கு பிறகு கோவை மாநகரம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்காவாக இருப்பதாகவும் விமர்சித்தார்.