சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை (மே4) மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க இருக்கிறது. இதையடுத்து 10 ஆண்டுகளுக்குப்பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவுள்ளது. முதல்முறையாக ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

இதையொட்டி,   மே 4 ஆம் தேதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், சட்டப்பேரவைக் குழுத் தலைவராக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

வெற்றி பெற்றுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு  வந்த வண்ணம் இருந்தனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆசி பெற்று வருகின்றனர். இந்த  நிலையில் நாளை எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான கடிதத்துடன்  மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகை சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கோரிக்கை வைப்பார்.

அதைத்தொடர்ந்து வரும்  7-ந் தேதி மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவி ஏற்பு விழா கிண்டி கவர்னர் மாளிகையில்  எளிமையான முறையில் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.