அதிக தொகுதிகள் தரும் அணியுடன் கூட்டணி? தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு!

Must read

சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில் எந்த அணியுடன் கூட்டணி சேர்வது என்பது குறித்து, தேமுதிக நிர்வாகிகள், உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆனால், கூட்டத்தில், அதிக தொகுதிகளை தரும் அணியுடனே கூட்டணி வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மோடி தலைமையிலான மத்திய பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணிக்கு தேமுதிகவையும்  சேர்க்க திமுக ஆர்வம் கொண்டது. இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் விஜயகாந்தை சந்தித்து பேசினார். ஆனால், தேமுதிகவின் நிபந்தனைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், திமுக அடக்கி வாசித்தது.

ஆனால், அதிமுக பாஜக தலைமைகளோ,  தேமுதிகவை தங்களது அணியில் இணைக்க மன்றாடி வருகின்றன. ஏற்கனவே மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விஜயகாந்தை சந்தித்துவிட்டு, தலை தெறிக்க ஓடி வந்த நிலையில், நேற்று துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் விஜயகாந்தை சந்தித்துவிட்டு, அவரது மனைவி பிரேமலதாவிடம் உரையாடினர்.

ஆனால், பிரேமலதா தனது நிபந்தனைகளை விட்டுகொடுக்க மறுத்த நிலையில், இருவரும் தொங்கிய முகத்துடன் திரும்பினர்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று தேமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தலைவர்  விஜயகாந்த் தலைமையில்  முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், தேமுதிக உயர்மட்ட குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்பட 60 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் கூட்டணி குறித்து சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையின் இடையிடையே விஜயகாந்த் சில வார்த்தைகள் பேசிய நிலையில், பிரேமலதாவே ஆலோசனை கூட்டத்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டம் நிறைபெற்ற நிலையில், எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் தேமுதிக தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை.

ஆனால், ஆலோசனை கூட்டத்தில், எந்த கூட்டணி அதிக தொகுதிகள் கொடுக்கிறதோ அந்த அணியுடன் கூட்டணி வைக்கலாம் என்று முடிவு  செய்திருப்பதாகவும், ஆலோசனை கூட்டத்தில் பேசிய கட்சி நிர்வாகிகள் பெரும்பாலோர், பாமகவை விட கூடுதலாக ஒரு தொகுதியாவது பெற வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக தேமுதிக அதிமுக கூட்டணியில் சேருவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 பாராளுமன்ற தொகுதிகளிலும், 2 சட்டமன்ற தொகுதி களும் தர முன்வந்த நிலையில், தேமுதிக 7 பாராளுமன்ற தொகுதி உடன் 1 மாநிலங்களவை தொகுதியும் கேட்டு பிடிவாதமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

More articles

Latest article