நெல்லை: நெல்லை பாஜக பிரமுகர் ஜெகன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி இன்று பாஜக சார்பில் போராட்டம் அறிவித்த நிலையில், இந்த கொலை தொடர்பாக திமுக முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியின் உறவினர்  பிரமுகரான பிரபு என்பவர்  சரண்டர் ஆகி  உள்ளார். இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த தி.மு.க., நிர்வாகி பிரபு  என்பவர், பாஜகவின் போராட்ட அறிவிப்பை தொடர்பாக வக்கீல்கள் முன்னிலையில் போலீசில் சரணடைந்தார். இதையடுத்து போலீசை கண்டித்து பா.ஜ. அறிவித்த ஆர்ப்பாட்டம் வாபஸ் பெறப்பட்டது.

திருநெல்வேலி மூளிக்குளத்தை சேர்ந்த ஜெகன் பா.ஜ., இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளராக இருந்தார்.  இவர் ஆகஸ்டு 30ந்தேதி கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மூளிக்குளத்தை சேர்ந்த பாலமுருகன் என்ற பிரபு தி.மு.க., முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியின் அண்ணன் செல்லத்துரையின் மகன் ஆவார். செல்லத்துரை கொலை செய்யப்பட்டதற்கு பழி வாங்கும் விதம் நடந்த கொலை வழக்கு ஒன்றில் பிரபு கைதானவர். பல்வேறு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர். தி.மு.க., நகர் துணைச்செயலாளராக சமீபத்தில் பொறுப்பு பெற்றார். இவரது மனைவி ரேவதி மாநகராட்சியில் மண்டல தலைவராக உள்ளார். தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

மூளிக்குளம் பகுதியில் ரேவதி அரசியல் வளர்ச்சிக்கு அதே சமுதாயத்தை சேர்ந்த ஜெகன் இடையூறாக இருந்ததால் அவரை பிரபு கொலை செய்திருக்கலாம் என போலீஸ் விசாரணையில்  தெரிய வந்தது. ஆனால் பிரபு கைது செய்யப்படாத நிலையில், அவரது  ஆதரவாளர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால்,  பிரபுவை  காவல்துறையினர் கைது செய்யாததால் ஜெகன் உடலை உறவினர்கள் திரும்ப பெற மறுத்து வந்ததுடன், இன்று (செப்டம்பர் 4ந்தேதி) அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பிரபுவை கைது செய்வதில் காவல்துறை தயக்கம் காட்டிய நிலையில்,  பாஜக  ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  நேற்று . பிரபு தனது வழக்கறிஞர் மூலம் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.  இந்த கொலை வழக்கால் அரசியல் ரீதியான தாக்கம் நீடிக்க வாய்ப்பிருப்பதால் பிரபுவை சரண்டர் ஆகும்படி திமுக உயர்மட்ட நிர்வாகிகள் அவருக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. எனவே தான் தலைமறைவாக இருந்த பிரபு இன்று திடீரென சரண்டர் ஆகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.  அதை தொடர்ந்து போலீசார் விசாரணைக்கு பிறகு அவரை கைது செய்தனர்.

பாஜக போராட்டம் காரணமாக திமுக நிர்வாகி பிரபு சரணடைந்துள்ளதால், கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகியின் உடலை பெற அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.