சென்னை: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்,  திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை யில், வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக கூட்டணிக்கு 4 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு இரு இடங்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, திமுக சார்பில் 3 பேரும், காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவருக்கும், அதிமுக சார்பில் 2 பேரும் போட்டியிடுகின்றனர். இதில், திமுக, அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. அதன்படி, திமுக சார்பில்,   ஆர்.கிரிராஜன், கே.ஆர்.என். ராஜேஷ்குமார் மற்றும் சு.கல்யாணசுந்தரம் ஆகியோர்  போட்டியிடுகின்றனர்.

இந்த மூன்று பேரும், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்,  தேத்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர் துரைமுருகன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழகத்தில் திமுக எம்பிக்களான டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கேஆர்என் ராஜேஷ்குமார் ஆகியோரது பதவிக் காலமும், அதிமுக எம்.பி.க்களான ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரது பதவிக் காலமும் வரும் ஜூன் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த 6 இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த மே 24-ம் தேதி தொடங்கியது. இந்நிலை யில், திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள, தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் மற்றும் இரா.கிராராஜன் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.