சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிரான போராட்டம் இன்று 200வது நாளை எட்டியுள்ளது. இன்றைய போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டு, போராட்டக்கார்களுக்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், திமுக தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை தவறி வருகிறது, இரட்டை நிலையை எடுக்கிறது என விமர்சித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 2ஆவது சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவெடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்காக 4,800 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன.
பரந்தூர் விமான நிலைய திட்டத்தைச் செயல்படுத்தப் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் தொழில்நுட்ப பொருளாதார ரீதியிலான விரிவான அறிக்கை அளிப்பதற்குத் தகுதியான நிறுவனத்தைத் தேடி வருகிறது. இதுகுறித்த ஒப்பந்தப் புள்ளி கடந்த டிசம்பர் மாதம் கோரப்பட்டது. இந்த ஒப்பந்தப் புள்ளிக்கான கால அவகாசம் இரண்டாவது முறையாகப் பிப்ரவரி 27ஆம் தேதி வரைmநீட்டிக்கப்பட்டிருக்கிறது
இந்தச்சூழலில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் இன்று 200ஆவது நாளை எட்டியிருக்கிறது
இன்றைய போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வனை, காவல்துறையினர் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதனிடையே தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் போராட்ட களத்துக்குச் சென்று கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார். இவர் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அதனால், வேல்முருகனின் வருகை பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில், தனது ஆதரவாளர்கள் சிலருடன் பரந்தூர் போராட்டக் களத்துக்கு வருகை தந்த வேல்முருகனுக்கு போராட்டக்காரர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து போராட்டக்கார்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற பொதுக்வட்டத்தில் திமுக அரசை மறைமுகமாக சாடினார். அப்போது, ஏற்கனவே “என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்த வர்கள் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிலம் கொடுத்தவர்கள் இன்று வரை வேலை பெறமுடியாமல், வீடுவாசல் இல்லாமல் தவிக்கின்றனர்.
இன்று இந்திய அரசுக்கு ஒரு விமானம் கூட இல்லை. ஏர் இந்தியா விமானங்களையும் டாடா நிறுவனத்துக்கு மோடி அரசு விற்றுவிட்டது. அப்படி இருக்கும் போது இங்கு எதற்கு விமான நிலையம்? என கேள்வி எழுப்பினார். இன்று டாடாவிடம் இருக்கும் விமானங்கள் நாளை அதானியிடம் போகலாம். அதானி கைகளிலிருந்து அம்பானி கைக்கு மாறும். அல்லது மத்தியஅரசின் அமித்ஷாக்களால் உருவாக்கப்படும் புதிய தொழில் அதிபர்களுக்கு கைக்குப் போகலாம்.
இந்தியன் ஏர்லைன்ஸ்கோ, ஏர் இந்தியாவுக்காகவோ கேட்டால் கூட ஏரி, குளம், வீடு பாதிக்கப்படாத இடமாகப் பார்த்து நிலம் தருவோம். ஆனால் நீங்கள் அதானிக்கும், டாடாவுக்காவும் நிலத்தைக் கேட்கிறீர்கள். அவர்களுக்கு எப்படி கொடுக்க முடியும் என்றவர், தமிழ்நாடு அரசு அவசர அவசரமாக இந்த திட்டத்தை நிறைவேற்றக் காரணம் என்ன? இங்குப் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களை 50 ஆண்டு காலமாக ஆண்டு கொண்டிருக்கும் இருகட்சிகளைச் சேர்ந்தவர்கள் வாங்கிக் குவித்திருக்கிறார்கள்.
இந்த பகுதியைச் சுற்றி மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முதலீடு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கு விலை வேண்டும் என்பதற்காக இப்படி வேகமாக வேலை செய்கிறார்கள். இவர்கள் நாளை நாளை இந்த 13 கிராம மக்களிடம் எப்படி வந்து ஓட்டு கேட்பார்கள்” என்று கேள்வி எழுப்பியவர், திமுக அரசு, தேர்தலின்போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறி வருகிறது, சில விஷயங்களில் இரட்டை நிலைப்பாடு தெரிகிறது என்றவர், மத்தியஅரசு நிர்பந்திக்கிறது என்பதற்காக, தமிழ்நாடு அரசு அவர்களுக்கு துணைபோக்ககூடாது, வாக்குறுதிகளை மீறக்கூடாது என்று கூறினார்.
தொடர்ந்து, இன்றைய போராட்டத்தில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேல்முருகன், திமுக அரசுக்கு எதிராக பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]