சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் வரும் 20ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசையும், நீட்டுக்கு ஆதரவாக பேசி வரும் தமிழ்நாடு ஆளுநரையும் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்தும், நீட் விலக்கு கோரியும் மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வந்தார். இந்த மசோதா தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார். ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து நீட் தேர்வு விலக்குக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில், நடப்பாண்டு, நீட் தேர்வு முடிந்து, மருத்துவ மாணவர் சேர்க்கையும் நடைபெற்று முடிந்த நிலையில், சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் என்பவர் மருத்துவ படிப்பில் சேர முடியாததால் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனம் உடைந்த அவரது தந்தையும் இரண்டு நாள்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், கடந்த வாரம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்விலும், நீட் தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஆளுநர் பேசியது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நீட் விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி இணைந்து வருகின்ற ஆகஸ்ட் 20-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.