புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவையில் மின் துறை தனியார் மயமாக்குவது குறித்து திமுக பாஜக இடையே நடந்த வாக்குவாதத்துக்கு முதல்வரும் அமைச்சரும் பதில் அளிக்கவில்லை.

நேற்று புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.   இந்த விவாதம் நடந்த போது முதல்வர் ரங்கசாமி, மற்றும் அமைச்சர்கள் குறிப்பாக  மின்சாரத் துறை அமைச்சர் நமச்சிவாயம் அவையில் இருந்தார்.  இந்த விவாதத்தில் பாஜக நியமன உறுப்பினர் அசோக் பாபு உரையாற்றினார்.

அவர் தனது உரையில், ”புதுச்சேரி மின் துறையில் இணையம் மூலமாகக் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆயினும் கட்டணம் வசூலிப்பதைப் பதிவு செய்வதில்லை.  எனவே அடுத்து பில்லில் பழைய கட்டணமும் சேர்ந்து வந்து குளறுபடியை ஏற்படுத்துகிறது” என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் சிவா குறுக்கிட்டு, “மின்துறை தனியார்மயமாக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. மின் துறையைத் தனியார்மயமாக்கப் போகிறீர்களா? இல்லையா? எனத் தெளி வுபடுத்துங்கள்” எனக் கேள்வி எழுப்பினார்.

இதனால் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், விவியன் ரிச்சர்டு, ராம லிங்கம், அசோக்பாபு ஆகியோர் எதிர்க்கட்சி தரப்பில் சிவா, நாஜிம், கென்னடி, சம்பத், வைத்தியநாதன் ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பாஜக நியமன எம்எல்ஏ ராமலிங்கம், “தொலைப்பேசி நிறுவனம் அரசிடம் இருந்த போது தொலைப்பேசி இணைப்பு பெற 8 ஆண்டு, 10 ஆண்டு காத்திருக்க வேண்டியிருந்தது. தனியார்மயத்தால் வீட்டுக்கு 4 தொலைப்பேசி உள்ளது” என்றார்

”ஆகவே நீங்கள்‘தனியார்மயத்தை ஆதரிக்கிறீர்களா?’ என  எதிர்க்கட்சி உறுப் பினர்கள் மீண்டும் கேள்வி எழுப்பியதால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

ராமலிங்கம், “அரசு ஊழியர்கள் மெத்தனமாகச் செயல்படக்கூடாது. அவர்களின் மெத்தனப்போக்கால்தான் அரசு துறைகள் நஷ்டத்துக்குச் செல்கின்றன. மின்துறை தனியார் மயத்தை நான் ஆதரிக்கவில்லை.  ஆனால் தனியார் என்றால் மோசம் என் பதும் கிடையாது” என்றார்.

நாஜிம், “மின்துறை தனியார்மயத்தை எதிர்க்கிறோம் என சொல்கிறீர்களா?” என்றார். ராமலிங்கம், “இது என்னுடைய தனிப் பட்ட கருத்து” என்றார். கென்னடி குறுக்கிட்டு, “மின்துறை தனியார் மயமாக்கப்படுமா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.

அமைச்சர் நமச்சிவாயம் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை அமருமாறு கூறினார்.  ஆனால் முதல்வர் ரங்கசாமி, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அவையில் இருந்தாலும் மின் துறை தனியார் மயமாகுமா என்பது குறித்து  ஆளும்கட்சி தரப்பில் இருந்து எந்த பதிலும் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.