தேர்தல் கூட்டணி குறித்து ரகசிய பேச்சு வார்த்தை நடப்பதாக பகிரங்கமாக கூறிவிட்டு அ.தி.மு.க.திரை மறைவு பேச்சுக்களை நடத்தியது.
தி.மு.க.விலும் இது போன்ற பேச்சுவார்த்தைகள் டெல்லி மற்றும் சென்னையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
டெல்லியில் நேற்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான மூத்த தலைவர்கள் முகாமிட்டிருந்தனர். தி.மு.க.உடனான தொகுதி பங்கீடு குறித்து அகமது படேல் மற்றும் குலாம் நபி ஆசாத்துடன் விவாதித்துள்ளனர்.
பின்னர் அழகிரி தலைமையிலான காங்கிரஸ் வி.ஐ.பி.க்களை தி.மு.க.எம்.பி.கனிமொழி தனியாக சந்தித்து பேசியுள்ளார்.
அதிகாரப்பூர்வமான பேச்சு வார்த்தை சென்னையில் இரு தினங்களில் நடைபெறும் என்ற போதிலும்-நேற்றைய டெல்லி ஆலோசனையில் கங்கிரசுக்கான தொகுதி பங்கீடு முடிந்து விட்டதாகவே தெரிகிறது.
புதுச்சேரி உள்பட 8 இடங்களை தருவதாக தி.மு.க.தரப்பில் கூறப்பட்டது. நீண்ட நேர பேரத்துக்கு பிறகு புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகள் என முடிவானது.
இந்த 10 தொகுதிகளில் கன்னியாகுமரி மற்றும் சிவகங்கை தொகுதிகள் அடக்கம்.
பா.ம.க. அ.தி.மு.க.வுடன் பேசிக்கொண்டிருக்கும் நிலையில்,முன்னாள் காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி மூலமாக தி.மு.க.விடமும் பேச்சு நடத்திக்கொண்டிருக்கிறது.
3 தொகுதிகளை தருவதாக தி.மு.க.ஒப்புக்கொண்டுள்ள நிலையில்,ஒரு ராஜ்யசபா மற்றும் 5 மக்களவை தொகுதிகளை கோருகிறது-பா.ம.க.
அ.தி.மு.க.அணியில் சேர்ந்தால் வெற்றி வாய்ப்பு உறுதி இல்லாத சூழலில்- 3 இடங்களை பா.ம.க.பெற்றுக்கொள்ளும் என்றே தெரிகிறது.
—பாப்பாங்குளம் பாரதி