கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் வித்தையை அறிமுகப்படுத்தி அதில் பெரும் வெற்றி பெற்றவர்கள் திராவிட இயக்கத்தினர். இன்றளவும், அவர்களின் தேர்தல் கூட்டணி வியூகங்களை மிஞ்சியவர்கள் எவருமில்லை என்றால் மிகையில்லை.

கூட்டணி வெற்றியென்பது, இருகட்சிகளின் ஒட்டு வங்கியின் எண்ணிக்கையை கூட்டி கிடைப்பதற்கு மட்டும் அல்ல. கூட்டணி என்பது தங்களின் கொள்கை முடிவுகளையும், அரசியல் நிலைப்பாட்டையும், வாக்காளர்களுக்கு சொல்லாமல் சொல்லும் தேர்தல் அறிக்கை.
“உனது நண்பன் யார் என்று சொல், நீ யார் என்று நான் சொல்கிறேன்” இந்த வாய்மொழி சொல், அரசியலில் கூட்டணி அறிவிப்பின் மூலம் தன் நிலையை உலகிற்கு கட்டியம் இட்டு பறைசாற்றும் தேர்தல் அறிவிக்கையே.
இன்றைய தேதியில் காங்கிரஸ் – உடன் கூட்டணி என்பது மத வெறியர்களுக்கான எதிர் அணி என்பதை சொல்லாமல் சொல்லும். இடது சாரிகளுடனான கூட்டணி என்பது பாட்டாளி மக்கள் நலனுக்கான கட்சி என்பதை உறுதிப்படுத்தும். இதுவே வெற்றிபிம்பத்தை கட்டியெழுப்பும், மற்றும் மதில் மேல் பூனையாக அமர்ந்துள்ள வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு ஈர்த்து வெற்றியை உறுதிப்படுத்தும்.
இதை நன்கு அறிந்த திமுகவினர் பின் ஏன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இத்தனை கெடுபிடி செய்கின்றார்கள்? மனமில்லையா ? அங்குதான் பாண்டிச்சேரி அரசியல் நிகழ்வு, திமுகவின் மனதில் விளையாடுகிறது. பாரதிய ஜனதா-வின் தேர்தலுக்கு பின்னான அரசியல் சித்து விளையாட்டுகளை எண்ணி திமுகவினர் நகர்வுகளை மேற்கொள்கின்றனர்.
பாரதிய ஜனதா, காங்கிரசின் ஐந்து ஆண்டுகால பாண்டிச்சேரி ஆட்சியை கடைசி 20 நாட்களில் கலைக்கவேண்டிய அவசியம் என்ன? அவர்கள் நினைத்திருந்தால், கோவாவை போல, மத்தியப்பிரதேசத்தைப்போல , கர்நாடகத்தைப்போல நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே கலைத்திருக்க முடியும். பின் ஏன் அவர்கள் காங்கிரசை பஞ்சாபிலும், புதுச்சேரியிலும் ஆட்சியை தொடரவிட்டார்கள். அவர்களுக்கு தமிழ் மண் மற்றும் பஞ்சாப் மனிதர்களை பற்றி நன்கு அறிவார்கள். இம்மண்ணின் போராட்ட குணமும், அரசியல் அறிவும் பாரதிய ஜனதாவின் தவறான அரசியல் நகர்வுகள், அவர்களை சவக்குழிக்குள் தள்ளும் என்பதை மற்றவரை விட பாரதிய ஜனதாவினர் நன்கு அறிவார்கள்.
பின் ஏன் பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை நிலைகுலைய செய்தனர்? பாரதிய ஜனதாவினர், இந்த நகர்வின் மூலம் ஒரு அரசியல் செய்தியை சொல்லாமல் சொல்லினர், தமிழகத்திலும் இதை தேர்தலுக்கு பின்னர் செய்யக்கூடும் என்பதே திமுகவினருக்கான செய்தி. இதன்மூலம் திமுகவினர் மனதில் கூட்டணி கட்சியினர் மீதான சந்தேக தீயை விதைத்தனர், அதன் விருட்சத்தை தேர்தலுக்கு பின்பு அறுவடை செய்வதற்காக!
திமுகவும், அவர்கள் எதிர்பார்த்ததைப்போலவே கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிக சிரத்தை எடுத்து தவறுகள் நிகழாவண்ணம் அரசியல் நகர்வுகளை செய்யும் பொருட்டு எடுக்கும் முயற்சிகள் கூட்டணி கட்சிகளிடையே சிறு பிணக்குகளை உண்டுசெய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை, இது தேர்தலுக்கு பின்னான அரசியல் நகர்வுகளுக்கு, பாரதிய ஜனதா களத்தை தயார் செய்வதற்கு வாய்ப்பாக அமைந்துவிடலாம்.
திமுக தற்காப்பு அரசியல் நகர்வுகளில் இருந்து தாக்குதல் அரசியல் நகர்வுகளுக்கு மாறவேண்டும். பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா அரசியல், அதையே பிற மாநிலங்களுக்கான பாடமாக தருகின்றது.
பாரதிய ஜனதா ஏன் பஞ்சாபிலும் மஹாராஷ்டிரத்திலும் அரசியல் சித்து விளையாட்டுகளை விளையாடவில்லை என்பதை கூர்ந்து கவனித்தால் புரியும். இரு அரசாங்கங்களும் பாரதிய ஜனதாவை தற்காப்பு அரசியல் நிலைப்பாட்டிலே நிலையெடுக்க செய்கிறார்கள். அதுவே, அவர்களின் காப்பரணாக இருக்கிறது.
திமுக, கூட்டணி கட்சியினரின் மனங்களை வெல்லவேண்டும், கூடவே மக்களின் மனங்களையும் வெல்லவேண்டும். திமுகவின் கூட்டணிக்கட்சிகள் எவரும் கொள்கை ரீதியாக தேர்தலுக்கு பின்னர் கூடாரம் மாறப்போவதில்லை என்பது திண்ணம். மதிமுக தவிர எவரும், கூடாரம் மாறுவதற்கு வாய்ப்பில்லை.

தேர்தலுக்கு பின்னர் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் விலை போகலாம், ஏன் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களும் விலைபோகலாம், ஆனால், கட்சிகள் விலைபோகப்போவதில்லை. கட்சிகளுடனான வலுவான கூட்டணி, தேர்தலுக்கு பின், பாரதிய ஜனதாவை தவறான அரசியல் நகர்வுகளை செய்ய அச்சம் கொள்ள செய்யும்.
திமுக எதிரிகளின் அரசியல் நகர்வுகளுக்கு இசைந்துகொடுக்காமல், அவர்களின் நகர்வுகளை தீர்மானிப்பவர்களாக மாறவேண்டும். ஏனெனில், அரசியலில் எதிரியை விட இரண்டுபடி முன் யோசிப்பவரே வெற்றியை வசியப்படுத்துவர்.
திமுக, தேர்தல் கூட்டணி ஏற்படுத்துவதை விட தேர்தலுக்கு பின்னான வலுவான கூட்டணியை இப்போதே கட்டியபமைப்பதே சாலச்சிறந்தது. மேலும், உளவியல் ரீதியாக பாரதிய ஜனதா-வை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதை நிலைநிறுத்தவேண்டும். அதற்கு அவர்களின் வெற்றியை தடுக்கவேண்டும், அதுமட்டுமே அவர்களின் தேர்தலுக்கு பின்னான அரசியல் நகர்வுகளை மட்டுப்படுத்தும்.
மேலும், தேர்தலுக்கு பின்னாக அதிமுகவில் குழப்பங்கள் நிகழும் வண்ணம் நிகழ்ச்சி நிரல் தீர்மானித்து செயல் ஆற்றவேண்டும். அதற்கு, திமுகவினர் கூட்டணியினரின் மனங்களை வெல்லவேண்டும்.
தமிழக தேர்தல் களத்தை விட தேர்தலுக்கு பின்னான களமே சுவரசியம்மிக்கதானதாக இருக்கும். திமுக இரண்டு களங்களையும் வெல்லும் ஆற்றல் படைத்தது என்பதில் எவருக்கும் ஐயம் இருக்க வாய்ப்பேயில்லை.
எனவேதான் திமுக, கூட்டணிக்குள் வரும் கட்சிகள் வெளியே செல்ல இயலாதவாறு, தனது கூட்டணியை சக்கரவியூகமாக அமைத்து வருகிறது.
கட்டுரையாளர்: ராஜ்குமார் மாதவன்.
[youtube-feed feed=1]