சென்னை:
234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு தேமுதிக தயாராக உள்ளது. அதிமுக , திமுகவுக்கு மாற்று கட்சியாக தான் தேமுதிக உருவானது. நிர்வாகிகள் மட்டுமல்ல தொண்டர்களும் தான் கட்சியை கூட்டணிக்கு கொண்டு சென்றுள்ளனர். எனக்கும் கேப்டனுக்கும் இதில் எந்த உடன்பாடும் இல்லை. தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்று கேப்டன் கூறியுள்ளார். ஆனால் எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை கூட்டணி.கேப்டன் விஜயகாந்த் முதல்வராக ஆக வேண்டும் என்பதுதான் நமது இலக்கு. தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பது தேமுதிகவுக்கு புதிதல்ல. கூட்டணியில் இருந்து கொண்டே நம்முடைய வாக்குகளைப் பெற்றுக்கொண்டு நம் கட்சியினரை புறக்கணிக்கின்றனர். இனி நாம் யாருக்காகவும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். ஒரு நிமிடத்தில் இவர் தான் வேட்பாளர் என சொல்லிவிட முடியும். ஆனால்கூட்டணி தர்மத்திற்காக பொறுமை காக்கிறோம், பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு. தனித்து நின்றாலும் 15% வரை வாக்கு வங்கி எங்களுக்கு இருக்கிறது. எங்களை நினைத்து பயப்படுகிறார்கள். நாங்கள் வெட்ட வெட்ட வளருவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.