கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு சவால்களைத்(!) தாண்டி ஆட்சியை வெற்றிகரமாக(பாஜக தயவில்) நடத்திவரும் எடப்பாடி பழனிச்சாமியை ஒரு பெரிய ஆளுமை என்றும், பெரிய தலைவர் என்றும் கூறி புளங்காகிதம் அடைவர் அரசியல் விமர்சகர்கள் என்ற பெயரில் உலாவரும் சில இந்திரன்கள்!

சமயங்களில், எடப்பாடி பழனிச்சாமியை, திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஒப்பிட்டு, அவரைவிட உயர்ந்தவர் எடப்பாடி என்றும்கூட ஜால்ரா அடித்திருக்கிறார்கள் அந்த (ரவி)இந்திரன்கள்! இப்போது அந்த அரசியல் விமர்சகரே வேறுமாதிரி பேசிவருவது வேறு விஷயம். இந்த அரசியல் விமர்சகர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பெரிய அறிவாளி என்றும் வழக்கமாக கூறிவருபவர்! ஆடிட்டர் குருமூர்த்தியை ‘சத்திரியர்’ என்று கூறி புளங்காகிதம் அடைபவர்!

சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம். கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்து, மத்திய பாஜக அரசால், பல்வேறு வகையிலும் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சசிகலா என்ற பெண்மணி, பெங்களூருவிலிருந்து நாளை காலை சென்னை புறப்படவுள்ளார்.

அவரின் வாகனத்தில் அதிமுக கொடி கட்டப்படுவதோடு, சில இடங்களில் அதிமுக கொடியேற்றுவது உள்ளிட்ட வழியெங்கும் வரவேற்பு நிகழ்ச்சிகள் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், எந்த அதிகாரமும் பெற்றிராத ஒரு பெண்மணி, அண்டை மாநிலத்திலிருந்து தமிழ்நாடு வருவதை, இந்திரன்களின் பார்வையில், ஆட்சியிலிருக்கும் ஒரு ஆளுமைமிக்க(!) தலைவர் எதிர்கொள்வதைப் பார்க்கும்போதுதான் பெரிய கேலிக்கூத்தாக இருக்கிறது.

ஜெயலலிதா நினைவிடத்தை குறிப்பிட்ட தேதிக்காக திறந்துவிட்டு திடீரென மூடுவது, போயஸ் தோட்ட இல்லத்தை அவசர அவசரமாக நினைவில்லமாக்கிவிட்டு, அதையும் மூடி வைத்திருப்பது, மாநில அரசின் முக்கிய அமைச்சர்களே காவல்துறை தலைவரை சந்தித்து(நவீன இந்திய அரசியல் வரலாற்றில் மிகவும் முரண்பட்ட ஒரு செயல்) சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பது குறித்து புகாரளிப்பது, கட்சி முக்கியஸ்தர்களைக் கூட்டி, யாரும் சசிகலாவின் பின்னால் போய்விடக்கூடாது என்று உருக்கமாக வேண்டுகோள் வைப்பது, சசிகலாவின் வருகையையொட்டி திடீரென டெல்லி சென்று பாஜக தலைமையை சந்திப்பது, கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பை பலப்படுத்துவது, முக்கிய அமைச்சர்கள் பேட்டியிலிருந்து கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் பாதியிலேயே ஓடுவது என்று ஆளுமை ஆட்சியின் காமெடிக் காட்சிகள் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டுள்ளன.

அதேசமயம், சசிகலா தமிழகம் வந்து செட்டிலானவுடன், காலில் விழும் படலங்கள் மீண்டும் ஆரம்பமாகும் என்றும் சில அரசியல் பார்வையாளர்கள் ஆரூடம் கூறுகின்றனர்.

எது எப்படியோ, இன்னும் சிலபல தினங்களுக்கு, ஊடகவியலாளர்கள் படு பிஸியாக இருப்பார்கள்! அரசியல் ஆர்வலர்களுக்கோ சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமிருக்காது!

 

– மதுரை மாயாண்டி