சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அவரது மறைவு செய்தி கேட்டு தேமுதிக தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்திலும், தேமுதிக அலுவலகத்திலும் குவிந்து வருகின்றனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும் சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமை கழகம் இன்று காலை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2006 முதல் 2016 வரை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவராகவும் இருந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிப்பு காரணமாக வீட்டில் இருந்தும், அவ்வப்போது மருத்துவமனையில் சேர்ந்தும் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில்,  கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி உடல்நலக்குறைவால் போரூர் அருகே உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் உடல்நலம் பற்றி பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், அவர் உடல்நலம் தேறி கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டடார்.  கிட்டத்தட்ட 23 நாட்கள் சிகிச்சைக்குப் பின் கடந்த டிசம்பர் 11ஆம் தேதி உடல் நலம் பெற்று விஜயகாந்த் வீடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து டிசம்பர் 14 ஆம் தேதி தேமுதிக சார்பில் நடைபெற்ற பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றிருந்தார். அக்கூட்டத்திற்கு வந்த விஜயகாந்தை நிலையை பார்த்து பலரும் கண் கலங்கினர். அவரது நிலைமையை கட்சி மனைவி அரசியலாக்குவதாக விமர்சனங்களும் எழுந்தன.

இந்த நிலையில் விஜயகாந்த் டிசம்பர் 26ந்தேதி மீண்டும்  போரூர் அருகே உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்து.  இதனைத் தொடர்ந்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாள் இன்று (டிசம்பர் 28) வீடு திரும்புகிறார்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமைக்கழகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து விஜயகாந்த் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.