சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி குழப்பங்கள் முடிவுக்கு வருகின்றன. விரைவில் வேட்பாளர்கள் பட்டியில் வெளியாகும் நிலை உருவாகி உள்ளன. தமிழ்நாட்டில் இந்த முறை, திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என 4 முனை போட்டிகள் உருவாகி உள்ளன.
தமிழ்நாட்டில், 39 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20ந்தேதி தொடங்குகிறது. வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27ந்தேதி. அதைத்தொடர்ந்து மார்ச் 28ந்தேதி வேட்பு மனு பரிசீலனை நடத்தப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து, ஏப்ரல் 19ந்தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்று, ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. அன்றைய தினமே வெற்றி தோல்வி முடிவுகள் தெரிய வரும்
நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில், பிரசார கூட்டங்களும் நடைபெறத் தொடங்கி உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாதக என நாக்குமுனை போட்டி நிலவவுள்ளது. திமுக கூட்டணியில் எந்த பிளவும் இல்லாமல் அப்படியே உள்ளதால், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை திமுக தலைமை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. வேட்பாளர்கள் அறிவித்து இன்று, நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அதிமுக பாஜக கூட்டணி பிரிந்து, தனித்தனியாக கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறது. இந்த இரு கட்சிகளும், பாமக, தேமுதிக உள்பட பல சிறு கட்சிகளை இழுத்த முயற்சித்து வந்தன. இதுதொடர்பாக கட்சிகளுக்கு இடையே அரசியல் பேரம் நடைபெற்று வந்தது. இதில், அதிமுக வெற்றிபெற்றதாக கூறப்படுகிறது. பாமக, தேமுதிகவின் பேரத்துக்கு அதிமுக தலைமை பச்சைக்கொடி காட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாமக, தேமுதிக தலைமைகளிடம், அதிமுக தலைமை பேசிய நிலையில், இதில் உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், வரும் 20ந்தேதி கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அதிமுக வட்டார தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
அதன்படி, தேமுதிகவுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலை போன்றே, கூட்டணியில் 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாகவும், அதுபோல பாமகவுடனும் அதிமுக கூட்டணி உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, வருகிற 20ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.