நியூயார்க்: கோபத்தில், பந்தை பின்புறமாக அடித்து, அது ‘லைன் நடுவரின்’ தொண்டையில் தாக்கியதால், பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் ஜோகோவிக், தொடரிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
செர்பிய நாட்டைச் சேர்ந்த ஜோகோவிக், கொரோனாவிலிருந்து மீண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் கலந்துகொண்டார். இவர் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கோப்பை வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார்.
இந்நிலையில், 4வது சுற்று ஆட்டத்தில், ஸ்பெயினின் பஸ்டாவிடம் புள்ளிக் கணக்கில் பின்தங்கியிருந்த சூழலில், விரக்தி கலந்து கோபத்தில், டென்னிஸ் பந்தை பின்புறமாக அடித்துவிட்டார்.
அப்பந்து, எதிர்பாராத விதமாக, பின்பக்கம் நின்றுகொண்டிருந்த லைன் நடுவரின் தொண்டைப் பகுதியில் தாக்கிவிட்டது. இதனையடுத்து, அவர் நிலைத்தடுமாறி விழுந்துவிட்டார் மற்றும் காயமடைந்தார்.
ஜோகோவிக் உடனடியாக அவரிடம் சென்று நலம் விசாரித்தாலும், யு.எஸ். ஓபன் டென்னிஸ் விதிமுறைப்படி அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கான புள்ளிகள் மற்றும் பரிசுத்தொகை போன்றவை கிடைக்காது. அவருடன் மோதிய பஸ்டா, காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தனது எதிர்பாராத செயலுக்காக, ஜோகோவிக் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.