சென்னை வசிக்கும் பெரும்போலரின் வேர், பிற மாவட்டங்களில்தான் இருக்கிறது.  பேச்சிலர்கள் மட்டுமல்ல, குடும்பம் தொழில் என்று சென்னையிலேயே செட்டில் ஆனவர்களும் கூட தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு தங்கள் சொந்த ஊருக்கு படையெடுப்பார்கள்.
இந்த நேரத்தில் பயணிகள் எல்லோருமே பணயக்கைதிகள்தான்.  டிக்கெட் கிடைக்குமா, கிடைத்தாலும் சீட் கிடைக்குமா, கிடைத்தாலும் நேரத்துக்கு ஊர் போய் சேர முடியுமா… என்று திக் திக் மனநிலைதான்.
2
இதையெல்லாம் விட இன்னொரு கொடுமை…   சென்னை புறநகர் பகுதியில் இருந்து திருச்சிக்கோ திருப்பூருக்கு ஆறு மணி நேரத்தில் சென்றுவிடலாம். ஆனால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர் வர மூன்று மணி நேரம் பிடிக்கும். அத்தனை நெரிசல்.
இந்த முறை தீபாவளுக்கு அப்படி நடக்காமல் இருக்கு தமிழக போக்குவரத்துத்துறை ஒரு வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
எல்லா பேருந்துகளும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படாமல், வேறு வேறு பகுதிகளில் இருந்து புறப்படும்படியாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதனால் நெரிசல் குறையும். சென்னை நகரத்தைக் கடக்கும் நேரம் குறையும்.
அதே நேரம் உங்கள் ஊர் பேருந்து, எங்கிருந்து கிளம்பும் என்று தெரிய வேண்டும் இல்லையா.. அதற்காகத்தான் இந்த செய்தி.
(ஏற்கெனவே வெளியிட்டிருந்தாலும் உங்கள் நினைவூட்டலுக்காக மீண்டும்..!)
இந்த தீபாவளுக்கு பேருந்தில் வெளியூர் செல்லும் சென்னைவாசிகளுக்கு சில சவுகரியங்களை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது
நேற்று முதல் நாளை வரை 3 நாட்கள் சென்னையில் புதிதாக 4 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு  பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அண்ணாநகர் மேற்கு பஸ் நிலையம்
செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலம் செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பஸ்கள் அண்ணாநகர் (மேற்கு) பகுதியில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே..
கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் வரை செல்லும் பஸ்கள் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் பஸ்கள் அனைத்தும் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு எதிரே 100 அடி சாலையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் அருகில் அமைந்துள்ள பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.
தாம்பரம் சானடேரியம்
திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தட பஸ்களும் (எஸ்.இ.டி.சி., விரைவு பேருந்து) தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் மெப்ஸ்– ல் இருந்து புறப்படும்.
பூந்தமல்லி பேருந்து நிலையம்
பூந்தமல்லி வழியாக வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையம்
முந்தைய பேருந்து நிலையங்களில் கூறப்படாத ஊர்களுக்கு வழக்கம்போல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து புறப்படும்.
குறிப்பு:
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம் பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்றுச்சாலை வழியாக வண்டலூர் செல்லும்.
ஆகவே,  தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்திற்கு பேருந்தில் பயணிக்க வேண்டும்.
அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் இணைப்பு பேருந்துகளை மாநகர போக்குவரத்து கழகம் இயக்குகிறது.
இதர வாகனங்களில் செல்வோர்..
கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுக்குன்றம் – செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர்– செங்கல்பட்டு வழியாக சென்றால், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்லலாம்.
உங்கள் தீபாவளி பயணம் இனிதாகட்டும்.  patrikai.com  இதழின் இனிய தீபாவளி வாழ்த்துகள்!