‘கியான்ட்’ புயல் தீவிரம்: சென்னையில் கனமழை……?

Must read

டில்லி,
ங்க கடலில் உருவாகியுள்ள ‘கியான்ட்’ புயல் தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக  தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலும், சென்னையிலும் கன  மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வங்க கடலில் உருவான ‘கியான்ட்’ புயல் தீவிரம் அடைந்து வருவதால், தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது.
chennai-rains
வங்க கடலில் அந்தமான் அருகே சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மியான்மர் நாட்டை நோக்கி நகர்ந்து சென்றது.  பின்னர் அது புயல் சின்னமாக மாறி திடீரென்று மேற்கு நோக்கி நகர தொடங்கியது.
‘கியான்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புயல், நேற்று மாலை நிலவரப்படி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 400 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருந்தது. அந்த புயல் தீவிரம் அடைந்து மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
இந்த புயல் தொடர்ந்து அதே திசையில் நகர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) அல்லது சனிக்கிழமை விசாகப் பட்டினத்துக்கும், சென்னைக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக விசாகப்பட்டினத்தில் உள்ள புயல் எச்சரிக்கை மையம்  அறிவித்து உள்ளது.
புயல் கரையை நெருங்கும் போது பலவீனம் அடைந்து விடும் வாய்ப்பு உள்ள போதிலும் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறி இருக்கிறது.
இந்த புயலின் காரணமாக சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் மற்றும் தெற்கு ஆந்திராவின் கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் ஒடிசா மாநிலத்திலும் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புயல் கரையை கடக்கும் போது பலத்த சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் புயல் எச்சரிக்கை மையம் கூறி உள்ளது.
சென்னை நகரை பொறுத்தமட்டில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மாலை முதல், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை  பலத்த  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த வருடம் பெய்த பெருமழையால் சென்னை நகரமே தண்ணீரில் தத்தளித்தது. அதுபோல் இந்த வருடமும் , தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மழை, புயல் அறிவிப்பு சென்னை மக்களை மிரள செய்துள்ளது.

More articles

Latest article