மதுரை:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,  மதுரையில் அதிகாலை 2.00 மணி வரை கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது. வியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்ட மதுரை மாவட்டத்துக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி பல நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் தங்களது ஊழியர்கள், தொழிலா ளர்கள், அலுவலகர்களுக்கு போனஸ் கொடுப்பது வழக்கம். இதைக்கொண்டு அவர்கள் தங்களது குடும்பத்தி னருக்கு, பொதுமக்கள் நகைகள், புத்தாடைகள், பொருட்கள் வாங்கிக்கொடுத்து சந்தோஷப்படுவர். இதனால் அந்த சமயத்தில் துணிக்கடைகள் உள்பட பல கடைகளில் கூட்டம் அலைமோதும்.

இதை கருத்தில்கொண்டு மதுரை  டெக்ஸ்டைல்ஸ் விற்பனையாளர் கூட்டமைப்பு சார்பில் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தீபாவளியை முன்னிட்டு  ஏராளமான வியாபாரிகள் வட்டிக்கு கடன் பெற்று, ஆடைகளை வாங்கி விற்பனை செய்து வருவதாகவும், தீபாவளிக்கு முந்தைய 25, 26-ஆம் தேதிகள் வெள்ளி, சனிக்கிழமைகள் என்பதால் கூலித்தொழிலாளர்கள், பிற மாவட்டங்களில் பணியாற்றுவோர், சுற்றுவட்டார மாவட்ட மக்கள் அவ்விரு நாட்களில் பொருட்கள், ஆடைகளை வாங்கிச் செல்வார்கள். ஆகவே  அந்த இரு நாட்களில் இரவு முழுவதும் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும்,  மதுரை காவல்துறையினர் தாங்கள் இரவு கடையை திறந்து விற்பனை அனுமதி மறுத்து வருகின்றனர், எற்கனவே கடந்த ஆண்டும் இதுபோல அனுமதி மறுக்கப்பட்டதால்,  பல வியாபாரிகள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுமீதான விசாரணை நேற்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி அதிகாலை 2 மணி வரை மட்டும் கடை நடத்திக் கொள்ள அனுமதி அளித்தார். மேலும், அரசாணையில் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு முறைகள், ஷிப்ட் முறையில்  பணியாளர்களை நியமிப்பது உள்ளிட்டவற்றை முறையாக பின்பற்ற உத்தரவிட்ட அவர், காவல் துறையினரும் வரம்புகளை வகுத்துக்கொள்ள உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

-பொதிகை குமார்