சென்னை:
திர்க்கட்சிகளின் கூட்டத்தை திசைதிருப்பவே சோதனை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை பழைய வழக்கு விசாரணை காரணமாக, தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்பியுமான கவுதம் சிகாமணி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இது சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அமலாக்கத்துறையினர், தடயவியல் நிபுணர்களைக் கொண்டு அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்புக்கு மத்தியில், பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றுள்ளார்.

அமலாக்கத்துறையின் சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசைதிருப்பவே சோதனை என்றும், “யார் பிரதமராக வரக்கூடாது என்பதே முக்கியம் என்ற முழக்கத்தை முதல்வர் ஸ்டாலின் முன்வைத்ததில் இருந்தே நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்,

தொடர்ந்து பேசிய அவர், எதற்காக இந்த சோதனை என்பதை தெரிந்துகொள்ளும் உரிமை வழக்கறிஞர்களுக்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த சோதனை குறித்து திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், சோதனைக்கு திமுக அஞ்சாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியும் தெரிவித்துள்ளனர்.

அமலாக்கத்துறை மூலம் இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டை உங்களால் பயமுறுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.