விருதுநகர்:
விருதுநகரில் உள்ள பட்டாசுக் கடையில் திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி சரவெடி பட்டாசுகளைப் பறிமுதல் செய்தார்.
நாடு முழுவதும் ரசாயனம் கலந்த பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதே போல் சரவெடி வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சரவெடி விற்பனை செய்பவர்கள், வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மக்கள் உத்தரவைப் பின்பற்றுகிறார்களா என்று அந்தந்த மாநிலங்கள் காவல்துறை மூலம் கண்காணிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் தீபாவளிக்கு இன்னும் 4 நாட்களே இருக்கக்கூடிய சூழலில் இது சாத்தியமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேரியம் ரசாயனம் கலந்த பட்டாசுகள், சரவெடி போன்றவற்றைத் தயாரிக்க, விற்க, வெடிக்க உச்ச நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடைசெய்யப்பட்ட பட்டாசுகளைச் சேமித்து வைக்கவோ, வெடிக்கவோ வேண்டாம் எனத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், விருதுநகரில் உள்ள பட்டாசுக் கடையில் திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி சரவெடி பட்டாசுகளைப் பறிமுதல் செய்தார்.