ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் காவல்துறை வாகனம் மீது ஏறி நடனமாடிய இளைஞர்கள் 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியையடுத்து பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 114வது ஜெயந்தி விழாவும் 59-வது குருபூஜை விழாவும் கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து தேவர் குருபூஜைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடையும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தடையை மீறி வெளிவட்ட மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சிலர், தேவர் குருபூஜைக்கு வந்துள்ளனர். வந்ததுடன் மட்டுமன்றி அங்கிருந்த வட்டாட்சியர் வாகனம், காவல்துறை வாகனங்களில் முன்பாக மறைத்து வாகனத்தின் மேற்கூரையில் ஏறி ஆட்டம் போட்டு காணொளி எடுத்துள்ளனர். இந்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது. தற்போது அதிகம் பரவிவரும் அரசு வாகனங்கள் மீது ஏறி இளைஞர்கள் குதித்து ஆட்டம் போடும் காணொளியானது, கமுதி மின் வாரியம் அலுவலகத்திற்கும், பசும்பொன் தேவர் நினைவிடத்திற்குச் செல்லும் நுழைவு வாயிலுக்கு இடையில் நடைபெற்று உள்ளது தெரியவந்துள்ளது. இப்படி அரசு வாகனத்தில் ஏறியது மட்டுமன்றி, கடந்த 28ம் தேதி காவல்துறை வாகனமொன்றின் பின்பக்க கண்ணாடியைத் தேவர் குருபூஜைக்கு வந்த அடையாளம் தெரியாத இளைஞர்கள் சேதப்படுத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து 29-ஆம் தேதி வட்டாட்சியர் வாகனம், காவல் வாகனங்களின் மேற்கூரையில் ஏறிக் குத்து ஆட்டம் போட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இவற்றையெல்லாம் கண்டித்து, தடையை மீறி வரும் வாகனங்களைப் பறிமுதல் செய்து, வாகன உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், ராமநாதபுரத்தில் காவல்துறை வாகனம் மீது ஏறி நடனமாடிய இளைஞர்கள் 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.