சென்னை,

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் இன்று விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 2ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் சபாநாயகரின் உத்தரவு அதுவரை நீடிக்கிறது. 18 எம்எல்ஏக்களும் தங்களது தொகுதியில் பணியாற்ற முடியாத சூழல் நீடித்து வருகிறது.

எடப்பாடியை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, கடந்த 4ந்தேதி விசாரணையின்போது அனைத்து தரப்பு ஆவனங்களும் இன்றைய விசாரணையின்போது  தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன் காரணமாக இன்றே விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, டிடிவி தரப்பு வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.

அதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு குறித்து ஆவணங்கள் தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கேட்டார். அதையடுத்து வழக்கை அக்டோபர் 2ந்தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, வரும் 23ந்தேதிக்குள் டிடிவி தரப்பு, முதல்வர் மற்றும் சபாநாயகர் தரப்பு உள்பட அனைத்து தரப்பினரும்  ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும்  உத்தரவிட்டார்.

அதுவரை ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகள் தொடரும் என்றும் கூறினார்.