ப்ளாக் விடோ படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்தது தொடர்பாக டிஸ்னி நிறுவனம் மீது நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மார்வெல் நிறுவனத்தின் நான்காம் கட்டப் படங்களில் ஒன்றான ப்ளாக் விடோ கடந்த ஜூலை 9ம் தேதி அமெரிக்கா உள்ளிட்ட திரையரங்குகள் திறக்கப்பட்டிருக்கும் நாடுகளில் மட்டும் வெளியானது. அதேநாளில் டிஸ்னி + ஓடிடி தளத்திலும் இப்படம் வெளியானது. திரையரங்கிலும், ஓடிடி தளத்திலும் ஒரே நாளில் வெளியான முதல் மார்வல் சூப்பர் ஹீரோ திரைப்படம் இதுதான்.
இப்படத்தில் ஸ்கார்லெட் ஜோஹன்சன், டேவிட் ஹார்பர், ரேச்சல் வெய்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய இப்படம் கரோனா அச்சுறுத்தலால் பலமுறை ஒத்திவைக்கப்பட்டு ஜூலை 9 அன்று வெளியானது.
முதல் மூன்று நாட்களில் அமெரிக்கத் திரையரங்குகள் மூலமாக மட்டும் 80 மில்லியன் டாலர்களையும், மற்ற நாடுகளில் 78 மில்லியன் டாலர்களையும் மொத்தமாக 158 மில்லியன் டாலர்களையும் வசூலித்து அசத்தியது. இது கடந்த ஒரு வருட தொற்றுக் காலத்தில் வெளியான படங்களில் பெற்ற அதிக வசூலாகும். ஓடிடியிலும் இந்தப் படத்துக்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தச் சூழலில் கடந்த வியாழன் அன்று நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் டிஸ்னி நிறுவனம் மீது லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் ப்ளாக் விடோ படத்துக்காக டிஸ்னி நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் படம் பிரத்யேகமான திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டதாகவும், படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைப் பொறுத்தே தன்னுடைய சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்று கூறப்பட்டதாகவும் ஸ்கார்லெட் தெரிவித்துள்ளார்.
தற்போது ப்ளாக் விடோ ஒரே நாளில் திரையரங்கிலும், ஓடிடி தளத்திலும் வெளியிட்டுள்ளதால் தனக்கு ரூ.370 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்கார்லெட் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து டிஸ்னி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்த வழக்கு அடிப்படையற்றது. கோவிட்-19 உலகம் முழுவதும் ஏற்படுத்திய பாதிப்பைக் கருத்தில் கொள்ளாமல் இப்படி ஒரு வழக்கைத் தொடர்ந்திருப்பது சோகத்தையும், அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது” என்று கூறியுள்ளது.
இந்த வழக்கு பற்றிய செய்திகளுக்கு டிஸ்னி பதிலளித்துள்ளது. கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு, பிளாக் விடோ இறுதியாக இந்த மாத தொடக்கத்தில் ஜூலை 9 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்படத் தொடங்கியதால், பல ஸ்டுடியோக்கள் தங்கள் திரைப்படங்களை ஸ்ட்ரீமிங் மூலம் ஆன்லைனில் வெளியிட முடிவு செய்தன. இது இறுதியில் திரையரங்குகளிலும் ஆன்லைனிலும் ஒரே நாளில் சில வெளியீடுகளுக்கு வழிவகுத்தது. பிளாக் விடோ திரையிடப்படும் நேரம் வந்தபோது, திரைப்படம் திரையரங்குகளில் வந்து டிஸ்னியில் அதே நாளில் பிரீமியர் அணுகல் கொண்ட பயனர்களுக்கு வெளியிடப்பட்டது என கூறியுள்ளது.