டெங்கு உட்பட நோயில்லா மாநிலமாக அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்  சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது விடுத்த ஊடக செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

“தற்போது நாட்டில் 80 சதவிகிதம் தனியார் மருத்துவமனைகள்தான் சிகிச்சை அளித்து வருகின்றன. மருத்துவம் தனியார் மயமாவது தடுக்கப்பட வேண்டும்.

மலேரியா ,காச நோய் ஒழிப்புப் பணிகளையும் தனியாரிடம் தமிழக அரசு வழங்கி வருகிறது. இது கண்டிக்கத்துக்கது.

பொது சுகாதாரத்துறை வலுப்படுத்த அரசு திட்டமிட வேண்டும்.   ஆனால் மத்திய மாநில அரசுகளிடம் அதீதமான அலட்சியப் போக்கு  உள்ளது. டெங்குவைப் பற்றிய ஆய்விலும் நமது மத்திய – மாநில அரசுகள் கவனம் செலுத்தவில்லை.

சீனாவில், மலட்டுத் தன்மைவாய்ந்த ஆண் கொசுக்கள் மூலம் ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது.  இதற்கு உல்பேச்சியா
(WolBachia) என்ற பாக்டீரியாக்கள் பயன்படுத்தப்படுகின்றன.  இந்த பாக்டீரியாக்கள் டெங்குவைரஸ் பரவலையும் தடுக்கிறது.

பிரேசில் நாட்டில் உல்பேச்சியா பாக்டீரியாக்கள் டெங்கு, ஸிக்கா போன்ற வைரஸ் பரவல்களை தடுத்திடவும், மலேரியா கிருமிகளின் பரவலைத் தடுத்திடவும் பயன்படுத்துப்படுகிறது.

நமது அரசு இத்தகைய தொழில் நுட்பங்களை பயன்படுத்தவில்லை என்பதோடு,  இதுகுறித்த ஆராய்ச்சிகளைக் கூட செய்யவில்லை. எனவே, டெங்கு உள்ளிட்ட நோய்களை தடுப்பது குறித்து ஆராய்ச்சிகளை அதிகரிக்க வேண்டும்.

அமெரிக்காவில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாத மருந்துகள் கொசு ஒழிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. கியூபாவில் டெங்கு தடுப்பை ஒரு மக்கள் இயக்கமாகவே ஃபிடல் காஸ்ரோ மாற்றினார். வியட்நாமில் மாணவர்களுக்கு கொசுவால் பரவும் நோய்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்நாடுகளிடமிருந்து நாம் படிப்பினைகளைப் பெறவேண்டும்.

2015 முதல், ரேசில், மெக்சிக்கோ, வெனிசூலா, ஆஸ்திரேலியா  உள்ளிட்ட  18 நாடுகளில் டெங்குக்கான தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  பிலிப்பைன்சில் தேசிய தடுப்பூசித் திட்டத்திலேயே டெங்குக்கான தடுப்பூசி சேர்க்கப்பட்டுள்ளது. டெங்வேக்சியா (Deng Vaxia) என்ற இத்தடுப்பூசி இந்தியாவிலும் லூதியான, பெங்களூரு, கொல்கத்தா போன்ற இடங்களில் பரிசோதனை செய்து பார்க்கப் பட்டுள்ளது.

இத்தடுப்பூசியை டெங்கு அதிகம் பாதித்துள்ள பகுதிகளில் பயன்படுத்திட உலக நல நிறுவனமும் அறிவுறுத்தியுள்ளது. எனவே, இத்தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து மத்திய – மாநிலஅரசுகள் பரிசீலிக்க வேண்டும். தடுப்பூசி ஆராய்சிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மருத்துவ ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு 25 விழுக்காடு மத்திய அரசால் குறைக்கப்பட்டது கண்டனத்திற்குரியது.

ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் மூன்றில் இரண்டு பங்கு ,வீடுகளின் உள்ளே சேமித்து வைத்துள்ள தண்ணீர் மூலமாகவே நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் கொசு ஒழிப்புப் பணியை மேற்கொள்ள போதிய ஊழியர்களை அரசு நியமிக்கவில்லை.எனவே, இப்பணியில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். மாணவர் இளைஞர்களை விழிப்புணர்வு பணிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடும் குடிநீர் தட்டுப்பாடே தண்ணீரை சேகரித்து வைக்கக் காரணமாகிறது. அதுவே கொசுப் பெருக்கத்திற்குக் காரணம். எனவே, தினந்தோறும் குடிநீர் வழங்கும் முறையை கொண்டுவரவேண்டும்.

ஏழை குடும்பங்களுக்கு, மூடியுடன் கூடிய தண்ணீர் கேன்களை வழங்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தி தரமான இலவச சிகிச்சையை வழங்க வேண்டும்.

காலை நேரத்தில் உள்ளது போல் மாலை 4.00 மணிமுதல் இரவு 09.00 மணி வரை மாலை நேர வெளிநோயாளிகள் பிரிவை அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் செயல்படுத்த வேண்டும்.இதற்காக தனியாக மருத்துவர்களையும்,செவிலியர்களையும் ,இரத்தப் பரிசோதனை செய்யும்டெக்னீசியன்கள், மருந்தாளுநர்கள், X–ray டெக்னீசியன்களையும் இதர ஊழியர் களையும் நியமிக்க வேண்டும்.

தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும்.

மருத்துவ ரீதியான அவசரநிலையை பிரகடனம் செய்திட வேண்டும்.

இராணுவ மருத்துவக் குழுக்களை வரவழைக்க வேண்டும். அரசுத் துறைகளிடையை டெங்குத் தடுப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பை உருவாக்க வேண்டும்.

டெங்குக் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

டெங்கு ஒழிப்புப் பணியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

கொசு ஒழிப்புப் பணியில் போதிய ஊழியர்களை நியமிக்க வில்லை. அவர்களுக்கு வெறும் ரூ 160 மட்டுமே தினக்கூலியாக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பாக வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டதில் ரூ 319 வழங்கப்படுகிறது. அரசு நியமித்துள்ள ஊழியர்களுக்கு ரூ 200 மட்டுமே வழங்கப்படுகிறது. தற்காலிக அடிப்படையில் 4 மாதங்களுக்கு மட்டுமே அவர்களை நியமிக்கின்றனர்.

நிரந்தர ஊழியர்களைப் போடாததால், புதிதாக அந்த வேலையில் சேர்பவர்களுக்கு ,கொசு ஒழிப்புப் பணியில் அனுபவம் இல்லாத நிலை உள்ளது. எனவே,கொசு ஒழிப்புப் பணியில் நிரந்தர ஊழியர்களைப் போட வேண்டும்.ஆண்டு முழுவதும் கொசு ஒழிப்புப் பணிகளை அவர்கள் மூலம் செய்திட வேண்டும்.

கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பான்கள் பற்றாக்குறை உள்ளது.

சுகாதார ஆய்வாளர்கள் பணியிடம் 60 விழுக்காடு காலியாக உள்ளது.இது பெரிய சவாலாக உள்ளது.

சுகாதார ஆய்வாளர்களுக்கான படிப்பை அரசு நிறுத்திவிட்டது.இதனால் அவ்வூழியர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஒரு பகுதியில் உள்ள ஊழியர்களை பிற பகுதிகளுக்கு அனுப்புவதால் கொசு ஒழிப்புப் பணி வெற்றியடையவில்லை.

கொசு ஒழிப்பு மருந்துகளின் தரம் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்படுகிறது.பல இடங்களில் மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

டெங்குவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும்” இவ்வாறு டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.