திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே அகரம் கிராத்தில் அண்ணாமலையார் கோவிலுக்கு தானம் தந்த விஜயநகர காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த  மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா இணைந்து, அந்த பகுதியில் கள ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது, அகரம் பகுதியில் ஒரு கல்வெட்டை கண்டுபிடித்தனர். திருவண்ணாமலை அருகே உள்ள ராதாபுரத்தில் இருந்து அகரம் செல்லும் சாலையில் ஆதிசிவன் கோவிலுக்கு எதிரே உள்ள வயல்வெளியின் மத்தியில் அமைந்துள்ள ஒரு இடத்தில் உள்ள வேப்பமரத்தின் கீழ் பலகை கல் ஒன்று இருப்பதைக் கண்டு, அதுகுறித்து விசாரித்தனர். அந்த கல்வெட்டு பல ஆண்டுகாலமாக அந்த பகுதியில் இருப்பதாக தெரிவித்தனர்.

சுமார் 5 அடி உயரமும் 3 அகலமும் கொண்ட அந்த கல்வெட்டை,  சுத்தம் செய்து ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். அதில்,  விஜயநகர காலத்திய எழுத்து தென்பட்டது.  திருவண்ணாமலை முருகர் மரத்தேரின் சுமைதாங்கி கல்லில் கல்வெட்டு 17 ஆம் நூற்றாண்டு இதற்குக் கீழ் உள்ள மீதி பாதியில் 16/ 17ம் நூற்றாண்டின் எழுத்து மைதியில் கல்வெட்டு இடம் பெற்றுள்ளது.

இப்பலகை கல்லில் முதல் பாதியில் இடது புறம் சூரிய சந்திரர் உடன் திருவண்ணாமலை கோயிலுக்குத் தரப்பட்ட தானத்தைக் குறிக்கும் சோணாசலகிரியும், நடுவில் சூலம் மற்றும் வலது புறத்தில் இரு குத்து விளக்கு காட்டப்பட்டுள்ளது.மேலும், ஸ்ஸ்ரீ எனத் தொடங்கும் இக்கல்வெட்டு சோழர்களையும் சிங்களவர்களையும் வென்றதாக வெற்றி செய்தியைக் குறிப்பிட்டு “இராவிந குமாரர் வேங் இராச” என்பவர் வக்கையூர் என்ற ஊரைத் தானமாக அளித்து அதன் மூலம் அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலை நாச்சியாருக்கும் அர்த்தசாம கட்டளைக்கு 30 பாக்கும் 20 வெற்றிலையும் அடங்கிய அடைகாய அமுது அளித்துள்ளார். இதனை நிறைவேற்ற அவ்வூரைச் சேர்ந்த மெய் சொல்லும் பெருமாள் அண்ணாமலையார் என்னும் மாகேஸ்வரரை நியமித்துள்ளார்.

மன்னரின் பெயர் தெளிவாக இல்லை என்று கூறும் ஆய்வாளர்கள்,  இக்கல்வெட்டில் பெரும்பாலான வார்த்தைகள் பாதி சொற்களாக இருப்பதோடு மன்னர் பெயர் மற்றும் காலம் தெளிவாகத் தரப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர். இருந்தாலும், இக்கல்வெட்டில் வரும் “வேங்” என்ற சொல்லை வைத்து இதனை வேங்கடபதி மன்னராகக் கருதலாம் என்று தெரிவித்துள்ளார்.

போரில் கழிந்த விஜயநகர சாம்ராஜ்ஜியம் பிற்கால விஜயநகர ஆட்சியில் இரண்டாம் வேங்கடபதி ராயர் (கி.பி 1586-1614) மற்றும் மூன்றாம் வேங்கடபதி ராயர் (கி.பி 1632-1642) என்று இருவர் உள்ளனர். மூன்றாம் வேங்கடபதி ராயர் காலத்தில் விஜயநகர சாம்ராஜ்யம் பெரும் அளவில் வீழ்ச்சி கண்டு முந்நூறு வருட ஆட்சி முடிவுக்கு வந்தது. அவரின் காலம் முழுவதும் போரில் கழிந்ததாக வரலாறு கூறுகிறது.

தமிழகத்தில் உள்ள பல கோயில்களுக்குக் கொடை வழங்கி இருந்தாலும் குறிப்பாகத் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குப் பல கொடைகள் வழங்கி யுள்ளதை இக்கோவிலில் பதிவாகியுள்ள 9 கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது. எனவே இவரின் காலத்தில் தான் இத்தானம் வழங்கி இருக்கூடும் என்று அனுமானிக்கப்படுகிறது.

சுமார் 400 வருடம் பழமையான இக்கல்வெட்டு மூலம் திருவண்ணாமலையைச் சுற்றி உள்ள பல ஊர்களில் இருந்து அண்ணாமலையார் கோவிலுக்குக் கொடை பெறப்பட்டது போலவே இவ்வூரிலிருந்தும் தரப்பட்ட தானத்தை இந்த கல்வெட்டு மூலம் அறிய முடிவதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.