பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவு 30000 லிருந்து 35000 கன அடியாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் கொஸஸ்தலை ஆற்றங் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தல்.

வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஏரி குளங்கள் நிரம்பியதால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில் நேற்று கனமழை கொட்டியதால் தமிழக எல்லையோர கிராமங்களில் இருந்தும் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி நீர் தேக்கத்திற்கு வினாடிக்கு 42000 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் உபரிநீர் வெளியேற்றப்படுவது 35000 கனஅடியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 30,000 கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில் கூடுதலாக 5000 கனஅடி நீர் வெளியேற்றயிருப்பதால் கொஸஸ்தலை ஆற்றங்கரையோரம் உள்ள மணலி புதுநகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அல்லது மாநகராட்சி முகாம்களில் தங்குமாறும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.