கோவை
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ஆதார் கார்டு இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கப்பட்டு வருவது தெரிந்ததே. சமீபத்தில் இந்த உதவி பெற ஆதார் கார்டு அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. அதனால் ஆதார் கார்டு இல்லாத பயனாளிகள் தங்களின் தினசரி தேவைகளை பூர்த்தி செய்யவும் பணம் இன்றி திண்டாடி வருகின்றனர்.
கோவை நகரின் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள ஒரு ராணவ வீரரின் மகளுக்கு இதே நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பெண்ணுக்கு தற்போது வயது 58 ஆகிறது. இவருடைய மூன்றாம் வயதில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். காய்ச்சலின் பாதிப்பினால் சிறுவயதில் இருந்தே மாற்றுத் திறனாளி ஆன் இவர், தனது வயதான பெற்றோரினால் பாதுகாக்க இயலாத நிலை ஏற்பட்டதால், தற்போது ஒரு காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவரது நடமாட முடியாத நிலையால், இவரை ஆதார் வழங்கும் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று ரேகைகளை பதிய வைத்து ஆதார் கார்டு பெற முடியவில்லை. இதனால் இவருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இவரது பெற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் அட்டையில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தை சேர்ந்த சேவகர் ஒருவர், “மாற்றுத் திறனாளிகளை மையத்தில் அழைத்துச் செல்வது மிகவும் கடினமாக உள்ளது. மேலும் அங்கு அவர்களின் கை ரேகை போன்ற பதிவுகளை பதிய வைப்பது இன்னும் கடினமாக உள்ளது. இந்நிலையில், அரசு இதை கட்டாயமாக்கியது கண்டிக்கத் தக்கது. மத்திய அரசு இதில் தலையிட்டு ஆதார் கார்டு கட்டாயமில்லை என அறிவித்தால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்காது” என வருத்தத்துடன் கூறினார்.