சென்னை,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர், தங்களை விடுதலை செய்ய உத்தரவிட வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில், அவர்களை விடுவிக்க முடியாது என  தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர்  26 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில் தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு கைதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நீண்டகாலமாக சிறையில் உள்ள  தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று  கோரி  ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.செல்வம் மற்றும் பொன்.கலையரசன் ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள்,  மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த  மனு மீது விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது.

அப்போது தமிழக அரசு சார்பில் 2012ம் ஆண்டு எடுத்த முடிவையே   பதில் மனுவாக,  அப்போது  உள்துறை செயலாளராக இருந்த ராஜகோபாலன் பெயரில்  தாக்கல் செய்யப்பட்டது.

அதில் ராஜீவ் கெலை வழக்கு கைதிகள் ஜெயக்குமார் ராபர்ட் பயாஸ் ஆகியோரை விடுதலை செய்ய முடியாது. சிறையில் நன்னடத்தைக்குழு  இவர்களை விடுவிக்க பரிந்துரை அளிக்க வில்லை என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது,   மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ராஜீவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பதுதான் என்று கூறியுள்ள மத்திய அரசு, ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.