சென்னை: தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.1 லட்சமாக இருந்த நிலையில், அதை ரூ.2லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் பல நிவாரண தொகைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
திமுக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மாற்றுத்திறநாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. உலக வங்கியின் நிதியுதவியுடன் 1763 கோடி மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரைட்ஸ் திட்டம் எனப்படும் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்து அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டது. மேலும், ரைட்ஸ் வரும் ஆண்டில் 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். உடல் குறைபாடு மதிப்பீடு சான்றிதழ், ஆரம்பக்கட்ட சிகிச்சை கோட்ட அளவிலேயே வழங்க 39 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்படும்.
ஓய்வூதியம் உயர்வு வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கவும், பல உதவிகளைப் பெறவும் தன்னார்வ உறுப்பினர்களைக் கொண்ட 150 மையங்கள் உருவாக்கப்படும். 6.8 லட்சம் மாற்றுத் திறனாளிகள் பயன் பெறும் வகையில் அவர்களுக்கான ஓய்வூதியம் மாதம் 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. கடுமையான பாதிப்பு கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு தொகை 1,500 ரூபாயில் இருந்து 2000ஆக உயர்த்த முதல்வர் ஏற்கனவே ஆணையிட்டுள்ளார். இதற்காக 1443 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதலிடம் மாற்றுத் திறனாளிகள் தொழில் முன்னேற்றத்திற்குக் கடன் உத்தரவாதம், வட்டி மானியத்தை மாநில அரசு வழங்குகிறது. இதன் மூலம் 11,155 மாற்றுத் திறனாளிகளுக்கு 50 கோடி கடனுதவி வழங்கி நாட்டிலேயே முதல் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. அரசு பலன்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு முழுமையாகச் சென்றடைய மாற்றுத் திறனாளிகள் குறித்த விரிவான டேட்டா பேஸை உருவாக்கியுள்ளோம். இதன் முதற்கட்டமாக பல்வேறு அரசு நலத்திட்டங்களில் பலன் பெறும் 9 லட்சம் பேரின் தரவுகள் இதில் இடம்பெற்றுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. விபத்தினால் இறக்கும் மாற்றுத்திறனாளி களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கை அல்லது கால் இழப்பு, கண்பார்வை இழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மகன், மகள் கல்வி பயில வருடாந்திர உதவித்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000 ஆக அதிகரித்துள்ளது. விடுதியில் தங்கி பயிலும் மகன், மகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ,2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி பத்தாம் வகுப்பு பயிலும் மகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ஆயிரத்திலிருந்து இரண்டாயிரமாக வழங்கப்படும். 12-ம் வகுப்பு பயிலும் மகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தியும், விடுதியில் தங்கி பயிலும் மகன் மகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.1200-லிருந்து ரூ.2500-ஆக உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணை முழு விவரம் காண கீழே உள்ள பிடிஎஃப் பைலை டவுன்லோடு செய்யுங்கள்…