இப்போது இணையப் பெருவழி எங்கும் பரவியிருப்பது ராதாரவி என்கிற பெயர்தான். சமீபத்தில் தி.மு.கவில் இணைந்த நடிகர் ராதாரவி கடந்த 28ம் தேதி சென்னை தங்கசாலை  அக் கட்சி கூட்டத்தில் பேசினார். அப்போது வைகோ மற்றும் ராமதாஸ் ஆகியோரை குறைமாத குழந்தைகளுடன் ஒப்பிட்டு அவர் பேசி- நடித்து காண்பித்தது சர்ச்சையாகி இருக்கிறது.

“மாற்றுத்திறனாளிகளை கொச்சைப்படுத்திவிட்டார் ராதாரவி” என்று சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார் ராதாரவி. அதோடு அவர் சார்ந்த தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கனிமொழி ஆகியோரும் அவரது பேச்சை கண்டித்திருக்கிறார்கள்.

“ராதாரவி மன்னிப்பு கேட்கவேண்டும். அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரி, மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கம் ஒன்ற அவரது வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது

இந்த நிலையில் patrikai.com  இதழுக்காக ராதாரவியுடன் பேசினோம்.

கேள்வி: மாற்றுத்திறனாளிகளை கொச்சைப்படுத்துவது போல் பேசினீர்கள் என்று பல தரப்பினரும் உங்களுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்களே..

ராதாரவி: நான் பேசியது அரசியல் விவகாரம். அதை அரசிலாகத்தான் பார்க்க வேண்டும். ஆனால் சிலர் அதை வேறு விதமாக எடுத்துக்கொண்டார்கள். ஆகவே இது குறித்து எங்கள் தளபதியிடம் விளக்கம் கொடுத்துவிட்டேன்.

(சற்று இடைவெளிவிட்டு..) சில தனிப்பட்ட நபர்களை குறித்துப் பேசும்போது அதை பொதுப்படையான விசயமாக, எடுத்துக் கொள்வது தவறு.  அன்று மேடையில் நான் பேசும்போது,”திமுக தோற்கும் என்று சொல்பவர்ள் குறைமாதக் குழந்தைகளைப் போன்றவர்கள். அவர்கள் சொல்வதை வைத்து முடிவெடுக்க முடியாது” என்றேன்.  குறைமாதக் குழந்தைகளைப் போல நடித்துக் காட்டினேன். அதுதான் பலர் தவறுதலாகப் புரிந்துகொள்ள காரணமாகிவிட்டது. அதற்காக வருத்தமும் தெரிவித்துவிட்டேன்.

கேள்வி: ஏற்கெனவே இதே போல பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசினீர்கள் என்று சர்ச்சை எழுந்தது. அப்போது ஒரு மகளிர் அமைப்பு உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையாளரிடம் புகார் அளித்தது..

ராதாரவி: அது வேண்டுமென்றே செய்தது. அதாவது,  அப்போது நடிகர் சங்க தேர்தல் நேரம். ஆகவே என் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தார்கள்.

கேள்வி: அப்படியானால் பெண்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக நீங்கள் பேசவில்லையா..

ராதாரவி: அது ஒரு பேட்டியில் நடந்த விசயம். “எப்போதும் பெண்களுடனேயே இருக்கிறீர்களாமே” என்பது போல கேட்டார்கள். அந்த கேள்வி என்னை கொச்சைப்டுத்துவது ஆகாதா?  அதற்கு நான் என்ன பதில் சொல்வது…? அதை சீரியஸாக ஆக்காமல், “பெண்களுடன் சுத்துவதாகத்தானே சொல்கிறார்கள்.. சொல்லட்டும். ஆண்களுடனா சுத்த முடியும்” என்று நகைச்சுவையாகவே சொன்னேன்.

ஆனால் அந்த கேள்வியைச் சொல்லாமல், நான் பதில் சொன்னதை மட்டும் வைத்து சர்ச்சையைக் கிளப்பினார்கள்.

இது குறித்து காவல்துறை விசாரித்தது. ஒன்றுமே இல்லை என்று அந்த புகாரை கைவிட்டுவிட்டது. இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம்… எதற்காக அந்த புகார் கொடுக்கப்பட்டது என்பதை..!

கேள்வி: அதற்கும் முன்பாக திருச்சியில் ஜெயலலிதா குறித்து நீங்கள் பேசியதும் சர்ச்சைக்குள்ளானது, நீங்கள் சிறந்த நடிகர், சட்டம் படித்தவர், உள்ளூர் அரசியல் கடந்து பலதரப்பட்ட விசயங்களை ஆழமாக அலசுபவர் என்பது உங்களை நேரடியாக அறிந்தவர்களுக்குத் தெரியும். இப்படிப்பட்டவர், சர்ச்சைக்குரிய பேச்சுக்களைத் தவிர்க்கலாமே..

ராதாரவி: நீங்கள் சொல்வது சரிதான். ( சற்று நேர இடைவெளிக்குப் பிறகு) அதே நேர் இன்னொரு விசயத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.

சில நேரங்களில் பிறரது தரத்துக்குப் போய் பேசனால்தான் புரிகிறது. தவிர,  நான் யாருக்கு பேசுகிறேன் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

கேள்வி: அதாவது..

ராதாரவி: கொஞ்சம் பொறுங்கள்.  நான் வில்லன் நடிகர் என்பதாலேயே என்னை அசிங்கப்படுத்திவிடலாம் என்று நினைக்கக்கூடாது.  எங்களுக்கு பாரம்பரியம் இருக்கு.

தவறாக பேசுவது எனக்குப் எனக்குப் பிடிக்காது… அக்கப்போர் பிடிக்காது. நான் வெளிப்டையா பேசுபவன்.  நான் யார் மனதையும் நோகடிக்க மாட்டேன். ஆனால், கடுமையாகப் பேச வேண்டுமானால் பேசித்தான் தீருவேன்.

கேள்வி: தற்போது உங்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தியிருக்கிறதே..

ராதாரவி: ஏற்கெனவே சொன்னேன். நான் யாரையும் கொச்சைப் படுத்தும் நோக்கத்தில் பேசவில்லை. அதே நேரம் பிறர் மனது புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்றும் சொல்லிவிட்டேன். அதே நேரம், சட்ட ரீதியான நடவடிக்களா வந்தால் எதிர்கொள்ளத யாராகவே இருக்கிறேன்.

இன்னொரு விசயம்..  செவிடன் காதில் சங்கு  ஊதியது போல என்றால் பழமொழியைச் சொன்னதாக ஆகுமா.. அல்லது மாற்றுத்திறனாளிகளை குற்றம் சொல்வதாக ஆகுமா.. அப்படியானால் அந்த பழமொழியையே நீக்க வேண்டும் அல்லவா?

திருக்குறளைப் பற்றி பேசினால்கூட அதில் சில தவறுகள் இருக்கலாம். ஆராய்ச்சி செய்துதான் பேச வேண்டும். (சிரிக்கிறார்.)

கேள்வி: அதே நேரம்..

ராதாரவி: (இடை மறித்து) கொஞ்சம் பொறுங்கள்… எவரது மனமும் காயப்படும்படி நான் பேச மாட்டேன். அதுவும் மாற்றுத்திறனாளிகளை குறை சொல்வதாக நான் பேசவே மாட்டேன்.

என் மூத்த சகோதரிக்கு மாற்றுத்திறனாளி குழந்தை பிறந்தது.  அந்தக் குழந்தை குறைமாதத்தில் பிறந்து இறந்துவிட்டது. எல்லாருமே வருத்தப்பட்டார்கள். அழுதார்கள்.  நான், “அந்த குழந்தை வளர வளர பலவித இன்னல்களை அனுபவிக்கும். அதற்காக அந்த குழந்தை இறந்தற்காக மகிழ்ச்சி அடைய வேண்டாம்.. அதே நேரத்தில் ரொம்பவும் வருத்தப்பட வேண்டாம்” என்றேன். இதைக்கூட மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக நான் பேசுவதாக நினைப்பார்களோ என்னவோ?

ஆனால், அந்த மாற்றுத்திறனாளி குழந்தையை நினைத்து நான் உள்ளுக்குள்ளேயே உருகியிருக்கிறேன். குமைந்திருக்கிறேன்.

அந்த பாதிப்புதான், பின்னாளில் நான் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ காரணமாக அமைந்தது. 

செய்த உதவிகளைச்  சொல்லிக்காட்ட வேண்டும் என்று நான் நினைத்ததே இல்லை. என்மீதான தவறான புரிதல் ஏற்பட்டதால் ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன்.

சென்னை அண்ணாநகரில் கிளப்பாலா என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி இருக்கிறது. அங்கே, என் அப்பா, நடிகவேள் எம்.ஆர். ராதா  பெயரில் ஒரு அறையே கட்டித்தந்திருக்கிறேன். ஒரே வார்த்தையில் சொல்வதென்றால்…  மாற்றுத்திறனாளிகள் என் உயிர்.

பேட்டி: டி.வி.எஸ். சோமு