கொல்கத்தா:

 வரும் 13ந்தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பாஜக அரசு நடைமுறைப்படுத்தும் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்க வரும் 13ந்தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட பல கட்சிகள் கலந்துகொள்வதாக அறிவித்து உள்ளன. இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவர் மம்தா கலந்துகொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி மற்றும்  இடதுசாரிகள் தேவையில்லாத அரசியல் சூழ்ச்சிகளை செய்வதாக குற்றம் சாட்டியுள்ள மம்தா, குடியுரிமை சட்ட விவகாரத்தில் காங்., இடதுசாரிகள் தரமற்ற அரசியல் செய்வதாகவும், குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தனியே போராடும் எனவும்,  ஜன.13-ம் தேதி டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது என்று தெரிவித்து உள்ளார்.

நேற்று நாடு முழுவதும் நடைபெற்ற தொழிலாளர்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த மம்தா, மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு சித்தாந்தம் எதுவும் இல்லை என்றும் அவர்களைவிட கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிறந்தவர்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.