நடிகர் விவேக் வாழ்ந்த வீடு உள்ள தெருவுக்கு சமீபத்தில், சின்னக்கலைவாணர் விவேக் சாலை என்று பெயரிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து திரையுலகினர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜாவும் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாரதிராஜா தெரிவிக்கையில், “யாரின் துணையின்றி திறமையால் நாகரீக சிந்தனைகளால், இயற்கையை உயிராக பிணைத்துக் கொண்டதால் புகழ் பெற்றவர் கலைஞன் விவேக்.
சிரிப்பு மருந்து மனிதர்களுக்கு. மரம் நடும் மருந்து இயற்கைக்கு என வாழ்ந்த சிறந்த கலைஞனை இறப்பு ஒருபோதும் மறக்கடித்து விட முடியாது.
அந்த பகுத்தறிவுக் கலைஞனை சிறப்பிப்பது தலையாயக் கடமையாகும்.
அவர் வாழ்ந்த பகுதிக்கு “சின்னக் கலைவாணர் விவேக் சாலை” என்ற பெயரிட்டு மகிழ்கிறது தமிழக அரசு.
அதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்கிய மாண்புமிகு முதல்வர். மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்த் திரையுலகம் சார்பிலும், தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் புரொடியூசர்ஸ் அசோசியேஷன் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அதற்கான முயற்சியெடுத்த திருமதி விவேக், பூச்சி முருகன், செல்முருகன், உதயா உள்ளிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் நன்றிகள்.
மீண்டும் ஒரு முறை திரைக்கலைஞர்களை பெருமைப்படுத்திப் பார்க்கும் தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி. நன்றி” இவ்வாறு பாரதிராஜா தெரிவித்து உள்ளார்.