டில்லி:

ர்நாடக மாநிலத்தில் குமாரசாமி ஆட்சிக்கு எதிராக 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி துக்கி உள்ள நிலையில், அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க மறுத்து விட்டார்.  அங்கு நிலையற்ற ஆட்சி நீடித்து வருகிறது.

இதற்கிடையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு கூறிய உச்சநீதி மன்றம், அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டமன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது, அவர்கள்மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றதுடன், அதிருப்தி எம்எல் ஏக்கள்  ராஜினாமா கடிதங்கள்மீது முடிவை அறிவித்த பிறகே சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதி மன்றத்தில் தீர்ப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில்,  உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு தன்னை கட்டுப்படுத்தாது என்று சபாநாயகர்  கூறியதுடன், ராஜினாமா குறித்து முடிவெடுக்க அவகாசம் தேவைப்படும் என்று கூறியதுடன்,  நேற்று சட்ட மன்றத்தில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்மீது விவாதத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், உச்சநீதி மன்றத்தில் இன்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில்,  15 எம்எல்ஏக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் கூடாது என்ற உத்தரவு குறித்து தெளிவான விளக்கம் தேவை என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், அதிருப்தி எம்எல்ஏக்களின் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவு அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டியதுடன், இது  அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணானது என்றும், அரசியல் கட்சிகளுக்கு அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை பறிப்பது போல் உள்ளது  என்றும்  தினேஷ் குண்டுராவ் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.