பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார்.

மும்பையின் கர் பகுதியில் இருக்கும் ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தற்போது திலீப் குமாரின் உடல்நிலை குறித்து, அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், திலீப் குமாரின் மனைவி சாய்ரா பானு கான் பகிர்ந்துள்ளார்.

“திலீப் மீதான கடவுளின் எல்லையில்லாக் கருணைக்கு நாங்கள் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். திலீப்பின் உடல்நிலை தேறி வருகிறது. நாங்கள் இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கிறோம். உங்களது பிரார்த்தனைகளை வேண்டுகிறோம். அவர் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டுமென்று அல்லாவிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்” என்று சாய்ரா பானு பதிவிட்டுள்ளார்.

மே மாதத்தில், இதே ஹிந்துஜா மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனைக்கு திலீப் குமார் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.