பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். மும்பையின் கர் பகுதியில் இருக்கும் ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று (ஜூலை 7) காலை 7.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி திலீப் குமார் காலமானார்.
திலீப் குமாரின் மறைவுச் செய்தி வந்தவுடனேயே பலரும் தங்கள் இரங்கல் செய்தியை சமூக வலைதளப் பக்கங்களில் பகிர ஆரம்பித்தனர்.
இந்நிலையில் எல்லை காந்தி கான் அப்துல் கஃபார் கானுடன் திலீப் குமார் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் எல்லை காந்தி, திலீப் குமாருடன் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி அவர்களும் இருக்கிறார்.
1969-ல் அண்ணா முதலமைச்சாராக இருந்த போது, கலைவாணர் என்எஸ் கிருஷ்ணனுக்கு சென்னையில் சிலை திறக்கப்பட்டது. இந்த விழாவுக்கு மும்பையிலிருந்து நடிகர் திலீப் குமாரும் வந்திருந்தார். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் அன்றைய திராவிட முன்னேற்றக்கழக நிர்வாகிகளுடன் திலீப் குமார் நிற்கும் புகைப்படம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.