சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு  12 வரை அமலில் உள்ளது. இந்த நிலையில், அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்கப்படும் என்றும்,  ஜூலை 19ந்தேதி முதல் தியேட்டர்கள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கும் என கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் முதல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. தொற்று பரவல் குறைய குறைய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.  கடந்த  5-7-2021 அன்று காலை 6 மணியுடன் ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மேலும் ஒருவாரம் தளர்வுகளுடன் ஊரடங்கை தமிழகஅரசு நீட்டித்து உத்தரவிட்டது.

அதன்படி  மக்களின் வாழ்வாதாரம், அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், மாநிலத்தின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து, 5-7-2021 முதல், 12-7-2021 வரை சில சேவைகளுக்கு மட்டும் தடை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதே வேளையில்,  அரசு, மற்றும் தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி நிகழ்வுகள்,  உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்களில் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை, உரிய காற்றோட்ட வசதியுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வழிபாட்டுத் தலங்கள்,  அனைத்துக் துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள், மால்கள், வணிக வளாகங்கள்  போன்றவை  உரிய காற்றோட்ட வசதியுடன், ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.  பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் 50% வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தியேட்டர்களை திறக்க தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையுலகினர் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பான மனுக்கள் முதல்வர் ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களது மனுவில்,  வரும் 12ந்தேதி முதல் தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின்  உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், தொற்று குறைந்து வருவதால், இன்னும் ஒருவாரம் பொறுத்திருந்து தொற்று பரவலை கண்காணித்து நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், திரையுலகினரின் கோரிக்கையை பரிசீலித்து, வரும் 19ந்தேதி முதல் 50சதவிகிதம் பேருடன் தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.