சென்னை: பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர், நடிகை நிவேதா பெத்துராஜுக்கு அமைச்சர் உதயநிதி ரூ.50 கோடி மதிப்பில் குவைத்தில் பங்களா வாங்கி கொடுத்துள்ளதாக வீடியோ பதிவிட்டுள்ளார். இது வைரலானதுடன், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தன்மீது அவதூறான கருத்துகள் அடங்கிய வீடியோ பரப்பப்பட்டு வருவதற்கு, நடிகை நிவேதா பெத்துராஜ் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் விளக்கம் அளித்து உள்ளார். எனக்கு சென்னையில் கார் ரேஸ் நடப்பதே தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் பிரபலமானவராக அறியப்படும் சவுக்கு சங்கர் சவுக்கு மீடியா என்ற பெயரில் சேனல் நடத்தி வருகிறார். இவர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான அவ்வப்போது பல்வேறு தகவல்களை வெளியிட்டு பேசி வருகிறார். இதனால், அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பேசும்பொருளாகி வருகிறது.
இந்த நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் குறித்து அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. நிவேதா பெத்துராஜ், ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தொடர்ந்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமா தாண்டி விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர். கார் ரேஸிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். இதனால் சென்னையில் நடைபெற இருந்த கார் ரேஸில் கலந்துகொள்வது போன்ற உடை அணிந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில்தான் சவுக்கு சங்கர், நடிகை நிவேதா பெத்துராஜுக்கு பிரபல அரசியல்வாதி (உதயநிதி ஸ்டாலின்) 50 கோடி ரூபாய்க்கு துபாயில் வீடு வாங்கி கொடுத்துள்ளதாக தெரிவித்தார். ஆனால், அதுசார்ந்த எந்த ஆதாரங்களும் காட்டப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
வீடியோ வெளியிட்ட சவுக்கு சங்கரின் சர்ச்சை பேச்சுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் மறுப்பு தெரிவித்து, அதுசார்ந்த விளக்கத்தையும் அளித்துள்ளார். மேலும், இந்த பதிவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பெயரையோ அல்லது சவுக்கு சங்கரின் பெயரையோ நிவேதா பெத்துராஜ் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பதிவில் பரப்பரப்படும் செய்தியின் உண்மைத்தன்மையை உறுதி செய்த பின்னர் அதனை பதிவிடும்படியும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக நிவேதா பெத்துராஜ் அவரது அதிகாரப்பூர்வ X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,. “சமீபகாலமாக எனக்கு சிலர் பணம் தாராளமாக செலவிடப்படுவதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த செய்தியை பரப்புவர்கள், ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுப்பதற்கு முன், அந்த தகவல் குறித்த உண்மையை சரிபார்க்கும் அளவிற்காவது மனிதாபிமானம் இருக்கும் என்பதற்காக இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தேன்.
நானும் எனது குடும்பத்தினரும் சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம், இது போன்ற தவறான செய்திகளை பரப்பும் முன் சற்று சிந்தியுங்கள். நான் மிகவும் கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்தவள். நான் எனது 16 வயதில் இருந்தே பொருளாதார ரீதியாக சுதந்திரமாகவும், நல்ல நிலையிலும் இருக்கிறேன். எனது குடும்பம் இன்னும் துபாயில்தான் வசிக்கிறது. நாங்கள் 20 வருடங்களுக்கும் மேலாக துபாயில் வசித்து வருகிறோம்.
திரையுலகில் கூட, நான் இதுவரை எந்த தயாரிப்பாளரிடமோ, இயக்குநரிடமோ, ஹீரோவிடமோ பட வாய்ப்பு தரும்படி கேட்டுக்கொண்டதில்லை. நான் 20 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன், அதன்படியே நான் தொடர்ந்து நடித்தேன். நான் எப்போதும் வேலைக்காகவோ அல்லது பணத்திற்காகவோ பேராசை கொள்ள மாட்டேன்.
என்னைப் பற்றி இதுவரை பேசப்பட்ட எந்தத் தகவலும் உண்மை இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். 2002ஆம் ஆண்டு முதல் துபாயில் வாடகை வீட்டில் வசிக்கிறோம். மேலும், 2013ஆம் ஆண்டு முதல் எனது கார் பந்தயம் மீது பெரும் விருப்பம் கொண்டு அதில் ஈடுபட்டு வருகிறேன். உண்மையைச் சொல்லப்போனால், சென்னையில் நடத்தப்படும் கார் பந்தயங்கள் பற்றி எனக்கு தெரியவே தெரியாது.
நீங்கள் சொல்லக்கூடிய அளவுக்கு நான் முக்கியமானவள் இல்லை. நான் மிகவும் எளிமையான வாழ்க்கையை நடத்தி வருகிறேன். வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்த பிறகு, நான் இறுதியாக மனரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன். உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை போலவே, நானும் தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையையே வாழ விரும்புகிறேன்.
நான் இதை சட்டரீதியாக எடுத்துச் செல்ல விரும்பவில்லை. ஏனென்றால் பத்திரிகையில் இன்னும் கொஞ்சம் மனிதாபிமானம் உள்ளது. அவர்கள் என்னை அந்தளவிற்கு அவதூறு செய்ய மாட்டார்கள் என்று நான் இன்னும் நம்புகிறேன்.
ஒரு குடும்பத்தின் நற்பெயரைக் கெடுக்கும் முன், நீங்கள் பெறும் தகவல்களைச் சரிபார்க்கவும். எங்கள் குடும்பத்தை இனி எந்தக் காயங்களுக்கும் ஆளாக்க வேண்டாம் என்று பத்திரிகையாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன். எனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவராக இருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.