நாகை: தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள ஸ்டாலின் மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தருமபுரம் ஆதீனத்திடம் திருநீறு பூசி ஆசிபெற்றதாக கூறப்படுகிறது. இதை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றன.
நாகை மாவட்டத்தில், தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரப் பயணத்தின் வழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு, பொன்னாடையும், சந்தன மாலையும் அணிவித்த தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஆசி கூறி திருநீறு வழங்கினார். அதனை நெற்றியில் பூசிக் கொண்டார் உதயநிதி. ஆன்மிக பேரவையின் சார்பில் ‘தமிழ் கடவுள் சேயோன்’ என்ற நூல் வெளியீட்டு விழாவும் அங்கு நடைபெற்றது. ஆதீனகர்த்தர் நூலை வெளியிட அதனை உதயநிதி பெற்றுக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து ஒரு தரப்பினர் திமுகவை கிண்டலடித்து வருகின்றனர்.
சமீபத்தில், முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஸ்டாலின் அங்கு கொடுக்கப்பட்ட விபூதியை கையில் வாங்கி அப்படியே தரையில் கொட்டி கையை துடைத்து கொண்டார். இந்த செயல் தேவர் சமூகத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இந்துக்கள் மத்தியிலும் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது.
ஏற்கனவே ஸ்டாலின் மனைவி உள்பட அவரது குடும்பத்தினர் கோவில் கோவிலாக ஏறி, யாகமும், வழிபாடுகளும் நடத்தி வரும் நிலையில், ஸ்டாலின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது, உதயநிதி ஸ்டாலின் தந்தையின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராகவும், இந்துக்களின் ஓட்டுக்களை பெறும் வகையிலும் தருமபுரம் ஆதினத்திடம் சென்று திருநீறு பூசி ஆசி பெற்றிருக்கிறார்.
உதயநிதியின் இந்த செயல் சமுகவலைதளங்களில் விமர்சனங்களை உருவாக்கி உள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன்களிடையே அரசியல் மற்றும் ஆன்மிகத்தில் இவ்வளவு கருத்து வேறுபாடுகளா? என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்துகூறிய இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம், இது ‘‘தி.மு.க.வின் இரட்டை வேடம்’’ , ஓட்டுக்காக அவர்கள் எதுவும் செய்வார்கள் என்று கண்டித்துள்ளார்.