மும்பை:
பட்ஜெட்டில் வரி உயர்த்தியதன் மூலம் வைர இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த பட்ஜெட்டில் வைரத்துக்கான வரி 2.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இதனால் வெட்டி பாலிஷ் செய்யப்பட்ட வைரம், ஜெம் கற்களின் இறக்குமதி பிப்ரவரியில் 25 சதவீதம் குறைந்து ரூ. 1,000 கோடி என்ற நிலைக்கு வர்த்தகம் குறைந்துள்ளது என்று ஜெம் மற்றும் ஜூவல்லரி ஏற்றுமதி வளர்ச்சி குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே பிப்ரவரியில் ரூ.1,250 கோடிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. எதிர் வரும் அடுத்த டுத்த மாதங்களில் வைர வர்த்தகம் மேலும் சரிவை சந்திக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. சுங்க வரியை 5 சதவீதமாக உயர்த்தியதன் மூலம் வைர வர்த்தகத்தில் இந்தியா சர்வதேச மையமாக விளங்குவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
நிரவ் மோடி போன்ற பெரும் வைர வியாபாரிகள் வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டதன் காரணமாக வைர தொழிலில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிய வைர வியாபாரிகள் வைரங்களை வெட்டி பாலிஷ் செய்யும் பணியை வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் ஒப்படைக்கின்றனர் என்று இங்குள்ள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.