தேனி: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் தொடர்பான போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், திடீரென தனது சொந்த மாவட்டத்துக்கு சென்ற துணை முதல்வர் ஓபிஎஸ், கடந்த 3 நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார். அதைத் தொடர்ந்து, இன்று முற்பகல் தேனியில் இருந்து சென்னை புறப்பட்டார்.
நாளை மறுதினம் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிடப்பட உள்ள நிலையில், மீண்டும் தர்மயுத்தத்தில் குதிக்கப்போகிறரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், எடப்பாடிக்கும், ஓபிஎஸ்க்கும் இடையே இழுபறி நீடித்து வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற செயற்குழுவிலும் முடிவு எடுக்க முடியாத அளவுக்கு மோதல் முற்றிய நிலையில், 7ந்தேதி அது தொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என கட்சியின் தலைமை அறிவித்தது. இதைத் தொடர்ந்து எடப்பாடியுடன் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளை புறக்கணித்த ஓபிஎஸ், கடந்த வாரம் திடீரென தனது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார். இது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து, தேனியில் உள்ள தனது பண்ணை இல்லத்தில்,  தொடர்ச்சியாக தனது ஆதரவாளர்கள் சந்தித்து வந்த ஓபிஎஸ் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டது.  இதையடுத்து,   இன்றுகாலை, கிருஷ்ணனின் கீதா உபதேசத்தை சுட்டிக்காட்டி டிவிட் பதிவிட்ட ஓபிஎஸ், இன்று முற்பகல், தேனியில் இருந்து  சென்னை புறப்பட்டார் .
நாளை மறுநாள் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அவரது சென்னை வருகை மிகவும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
கட்சியின் வளர்ச்சிக்காக எடப்பாடியுடன் அணுசரித்து போவாரா, அல்லது, கட்சிக்கு எதிராக  போர்க்கொடி தூக்கி மீண்டும் மவுன விரதம் இருந்து, தர்மயுத்தம் நடத்தப்போகிறாரா என்பது இன்னும் 2 நாளில் தெரிய வரும்.

அதிமுக தொண்டர்களின் நலன் அடிப்படையிலே எனது முடிவு! கீதா உபதேசத்தை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் 'பஞ்ச்'…