சென்னையில் இருக்கும் பழமை வாய்ந்த திருக்கோயில்களில் வேளச்சேரி தண்டீஸ்வரர் திருக்கோயிலும் ஒன்று. இங்கு அதிசயத்தக்க வகையில் எல்லா சிவாலயங்களிலும் நின்ற கோலத்தில் காட்சி தரும் வீரபத்திரர், இங்கு அமர்ந்த கோலத்தில் அருளுகிறார்.

இந்த ஆலயத்தில் எமதர்மன் மீண்டும் தண்டம் பெற்ற தலமாகும். அதனால் 60, 70ம் திருமணம் செய்து கொள்ளவும், ஆயுள் விருத்தி ஹோமங்கள் செய்து கொள்ள சிறந்த இடமாகும்.

ஆயுள் விருத்தி பெறவும், இழந்த பதவி மீண்டும் கிடைக்க வழிபடலாம். கன்னிப் பெண்கள், பெண்களின் காவல் தெய்வமான வீரபத்திரனையும், சப்தகன்னியர்களையும் வணங்கிச் செல்கின்றனர். இந்த ஆலயத்தில் சுவாமி சன்னதி கோஷ்டத்தில் துர்க்கையும், பிரகாரத்தில் சரஸ்வதியும், லட்சுமியும் உள்ளனர்.

பிரகாரத்தில் உள்ள விநாயகர் வேத விநாயகர் என்றழைக்கப்படுகிறது. இவர் கையில் வேதங்கள் வைத்திருக்கிறார்.

அற்ப ஆயுள் பெற்றிருந்த தன் பக்தன் மார்க்கண்டேயனின் உயிரை எடுக்க சென்ற எமனை சிவபெருமான் எட்டி உதைத்தார். அதோடு அவரின் பதவியையும் பறித்தார். இழந்த பதவியை திறம்பப் பெற எமன், பூலோகத்தில் சிவாலய தரிசன யாத்திரையை மேற்கொண்டார்.

இந்த ஆலயத்தில் தீர்த்தம் உருவாக்கி சிவனை வணங்கினார். அப்போது எமனுக்கு காட்சி தந்த சிவன், தண்டம் கொடுத்து மீண்டும் பணி செய்யும்படி அறிவுறுத்தினார். இதனால் இந்த ஆலய சிவன் ‘தண்டீஸ்வரர்’ என்ற பெயர் பெற்றார். இழந்த பதவி கிடைக்க வேண்டினால் திரும்ப அருளக்கூடியவர்.