சென்னை:
மிழகம் முழுவதும் உள்ள டிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்களில் விசாரணைக்காக அழைத்து வரப்படுவோரை விசாரிக்க தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் இறந்ததையடுத்து தமிழக காவல்துறை தலைவரும், சட்டம்-ஒழுங்கு டிஜிபியுமான திரிபாதி அனைத்து காவல்துறை ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள், அனைத்து காவல்துறை எஸ்பிக்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை டிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்களில் விசாரணைக்காக அழைத்து வரப்படும் சந்தேக நபர்களை விசாரிப்பதற்காக தனி இடத்தை ஏற்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதற்கான இடம் அமையவில்லை என்றால் உடனடியாக சரக காவல்நிலையங்களில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் டிஜிபி கூறியுள்ளார். அந்த மையங்களில் விசாரணைக் கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை அவசியம் என்றும், விசாரணைக் கைதியை நீதிமன்றத்திற்கு அழைத்துவரும் முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவல் நிலையங்களில் ஜிடி என்றழைக்கப்படும் பொது டைரியில் முறைப்படி அன்றாட நிகழ்வுகள் பதிவு செய்யப்படவேண்டும் எனவும், கைதானவரை ஒரு நாளைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதால் தற்போது அறையில் அடைத்தபின்பு நீதிமன்றத்திற்கு வீடியோ மூலம் பதிவு செய்து அனுப்பலாம் என்றும் டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.