திருவண்ணாமலை: தீபத்திருவிழாவையொட்டி களைகட்டியுள்ள திருவண்ணாமலையில், பக்தர்கள் கூட்டம் வரத்தொடங்கி உள்ள நிலையில், அங்கு ஆய்வு மேற்கொண்ட டிஜிபி சைலேந்திரபாபு, மலையை சுற்றி கிரிவலம் வந்தார். ஓடிக்கொண்டே மலையை சுமார் ஒன்றேமுக்கால் மணி நேரத்தில் சுற்றி வந்தார்.
கார்த்திகை தீபத் திருவிழவையொட்டி திருவண்ணாமலைக்கு 30லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதற்கிடையில், தமிழ்நாட்டில் ஆங்காங்கே பெட்ரோல் குண்டு சம்பவங்கள், கார் வெடிப்பு போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளதால், திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ‘
அங்கு பாதுகாப்பு ஏற்பாடு பணிகள் குறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, இன்று அதிகாலையில் உடற்பயிற்சி செய்யும் வகையில், கிரிவலப்பாதையுடன் ஓடி கிரிவலம் சென்றார். மேற்கொள்வதற்காக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கிரிவலப்பாதையில் ஓடினார்.
சாதாரணமாக பக்தர்கள் நடந்து சென்றால் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையை சுற்றி வர குறைந்த பட்சம் 3மணி நேரம் முதல் 5மணி நேரம் வரை ஆகும். ஆனால், சைலேந்திரபாபு ஓடிக்கொண்டே கிரிவலப்பாதையை சுற்றியதால் 1மணி நேரம் 52 நிமிடத்தில் ஓடி முடித்து உள்ளார்.
இந்த தகவலை அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் அதில் காவல்துறையில் இன்னும் வேகமாக ஓடுபவர்கள் உள்ளனர் என்றும் பதிவிட்டு இருந்தார்.