சென்னை
இன்று ராஜிவ் காந்தி கொலை சம்பவத்தில் காயமடைந்த டிஜிபி பிரதீப் வி பிலிப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான ராஜிவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி கொல்லப்பட்டார். சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் அவர் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள வந்த போது மனித வெடிகுண்டு தாக்குதலால் மரணம் அடைந்தார். அப்போது ஒரு சிலர் உயிரிழந்து பல காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் அப்போது காஞ்சிபுரம் பகுதியில் காவல்துறை சூப்பிரண்ட் அதிகாரியாக இருந்த பிரதீப் வி பிலிப் ஒருவர் ஆவார். இவருக்கு அந்த வெடிகுண்டு விபத்தில் படுகாயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அவருடைய தொப்பி மற்றும் பெயர்ப் பலகை ஆகியவை கொலை வழக்கில் கிடைக்கப்பட்ட தடயமாக வைக்கப்பட்டிருந்தது.
பிரதீப் வி பிலிப் தற்போது தமிழகக் காவல்துறை பயிற்சிப் பிரிவு டி ஜி பி ஆக உள்ளார். அவர் இன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். சென்னை ராஜரத்தினம் காவல்துறை மைதானத்தில் அவருக்குப் பணி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. அவருக்குச் சட்டம் ஒழுங்கு டிபிஜி சைலேந்திர பாபு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்துள்ளார்.
அவர் தனது பணி நிறைவு நாள் அன்று தான் ராஜிவ் காந்தி கொலையுண்ட போது அணிந்திருந்த உடைகள் மற்றும் தொப்பி, பெயர்ப் பலகையை அணிய விரும்பினார். அவற்றை தமக்கு வழங்கக் கோரி அவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதை அவர் பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளது. மேலும் நீதிமன்றம் அவர் ராஜிவ் காந்தி கொலையில் படுகாயம் அடைந்த நிகழ்வை நினைவு கோரி பாராட்டி உள்ளது.