திருப்பதி

திருப்பதி கோவிலில் இலவச தரிசன டோக்கன் வழங்கும் இடத்தில் பக்தர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

திருப்பதி கோவில் கொரோனா பரவலால் மூடப்பட்டது.  அதன் பிறகு கூட்டம் கூடுவதைத் தடுக்க இலவச தரிசனம் நிறுத்தப்பட்டது.  சிறப்பு ரூ.300 தரிசனம், விஐபி தரிசனம் ஆகியவை மட்டும் அனுமதிக்கப்பட்டது.  பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முதலில் சித்தூர் மாவட்ட பக்தர்களுக்குச் சோதனை முறையில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு பிறகு அனைவருக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

தற்போது புரட்டாசி என்பதால் டோக்கன் வழங்கும் திருப்பதி சீனிவாசம் கட்டிட வளாகத்தில் ஏராளமானோர் கூடி உள்ளனர்.  எனவே கூட்டத்தைத் தவிர்க்க நாளை முதல் இலவச தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது.  நாளை வரை அளிக்க வேண்டிய இலவச டோக்கன்கள் நேற்றே தீர்ந்து விட்டதால் அந்த கவுண்டரைத் தேவஸ்தானம் மூடி விட்டது.

இன்று இலவச தரிசன டோக்கன்கள் கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் சுமார் 30000க்கும் அதிகமான பக்தர்கள் சீனிவாச வளாகத்தில் குவிந்துள்ளனர்.  இனி அங்கு டோக்கன் வழங்கப்பட மாட்டாது என ஊழியர்கள் அறிவித்ததால் பக்தர்கள் கடும் ஆவேசம் அடைந்தனர்.  அவர்கள் டோக்கன் வழங்க கோரி கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தி உள்ளனர்.

மேலும் அந்த பகுதியில் பக்தர்கள் சாலை மறியல் நடத்தி உள்ளனர்.  சம்பவம் அறிந்து அங்கு காவல்துறையினர் விரைந்து வந்து பக்தர்களைப் பலவந்தமாக அப்புறப்படுத்தி இருவரை மட்டும் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.