தேவி பட்டினம்,, ராமநாதபுரம்,
ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமபிரான் ராமேஸ்வரம் வந்து சிவபூஜை செய்தது அனைவரும் அறிந்தது தான்.  அதற்கு முன்பு எள்ளால் ஒரு தலத்தில் அவர் சிவவழிபாடு செய்திருக்கிறார் என்பது உங்கஷளுக்கு தெரியுமா?
அந்த தலம் தேவி பட்டினம்.
இங்கு 12ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட திலகேஸ்வரர் ஆலம். பின்னர் வந்த சேதுபதி மன்னர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டது. அக்காலத்து துறைமுக நகரமாக விளங்கிய தேவிப்பட்டினத்தில் வசூலிக்கப்படும் சுங்க தீர்வையிலிருந்து ஒரு பகுதி இவ்வூர் கோயில் பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
தேவிப்பட்டினம், மாதவன்கோட்டை, கழனிக்குடி, புறக்குடி, ஆகிய ஊர்களை பாண்டிய மன்னர்கள் இக்கோயிலுக்கு தானம் செய்ததாக கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.
வண்ணமயமான சுதை உருவங்கள் தாங்கி ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் எழிலாக காணப்படுகிறது திலகேஸ்வரர் ஆலயம்.
உள்ளே நுழைந்தவுடனே ஏதோ நந்தவனத்திற்குள் வந்து விட்டது போன்ற உணர்வு ஏற்படும். காரணம் கோயில் வளாகம் முழுவதும் பலவித மலர்ச்செடிகள், மூலிகை செடிகள், தென்னை மரங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன.
பலிபீடம், கொடிமரம், பிரதோஷ நந்தியை தரிசித்து விட்டு முன் மண்டபம் வந்தால் அம்மன் சௌர்ந்தர்ய நாயகி பெயருக்கேற்ப அழகு கோலத்துடன் தனிச்சன்னதியில் அருள்வதை
காணலாம்.
அருகே விநாயகர், நாகராஜர், முனீஸ்வரர், காலபைரவரை வணங்கிவிட்டு மகா மண்டபத்தில் மூலவர் நந்தி, நடராஜர், விநாயகர், முருகன், மனோன்மணி என்கிற ஆதி துர்கையையும் தரிசனம் செய்யலாம். அடுத்து அர்த்த மண்டபமும், அதை தொடர்ந்து கருவறையும் அமைந்துள்ளது.
ராமேஸ்வரம் செல்லும் வழியில் இத்தலத்திற்கு வந்த ராமபிரான் இங்குள்ள ஈசனை வழிபட மலர்கள் எதுவும் கிடைக்காத நிலையில் அருகே வளர்ந்திருந்த எள்ளுச்செடிகளை பிடுங்கி அதிலுள்ள எள்ளை உதிர்த்து அதை கொண்டு வழிபாடு செய்தாராம்.
தில என்றால் எள் என்று பொருள் ராமபிரானால் எள் கொண்டு பூஜிக்கப்பட்டதால் திலகேஸ்வரர் என அழைக்கப்படும் இவரது நெற்றியில் திலகம் போன்ற அமைப்பு காணப்படுவதும் திலகேஸ்வரர் என்ற பெயருக்குப் பொருத்தமாகவே அமைந்துள்ளது.
தினமும் இருகால பூஜை நடைபெறும் இவ்வாலயத்தில் சிவனுக்குரிய அனைத்து விசேஷ நாட்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.
இத்தலத்தின் காவல் தெய்வமாக விளங்கும் உலகநாயகி அம்மனை பெருமைப்படுத்தும் விதமாகவே தேவிப்பட்டினம் என அழைக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.