பாட்னா

பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பொறுப்பாளராக  முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக – சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் முதல்வர் பதவி இழுபறி காரணமாக அந்தக் கூட்டணி ஆட்சி அமைக்க இயலவில்லை.  அம்மாநில அப்போதைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக முயன்றும் அந்த முயற்சி தடைப்பட்டது.  தற்போது சிவசேனா கட்சி மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி செய்து வருகிறது.

பீகார் மாநில சட்டப்பேரவை ஆயுட்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.  தற்போது  அங்கு ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது.  இந்த கூட்டணியில் பாஜக, லோக் ஜனசக்தி கட்சிகள் உள்ளன.   எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

நடைபெற உள்ள பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தேர்தல் பொறுப்பாளராக மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.   பாஜக இந்த தேர்தலுக்காக 14 பேர் கொண்ட சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது.  இந்தக் குழுவில், பீகார் மாநில துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஷ்வால், மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பாஜக தலைமையின் விருப்பத்தின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதன் மூலம் மாநில அளவில் கடுமையாகத் தோல்வி அடைந்த தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் தேசிய அரசியலில் நுழைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.