சிறப்புச் செய்தி:

புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில்,  திருஞானசம்பந்தர் அருளிய தேவார பதிகங்கள் பதிக்கப்பட்ட பளிங்குக் கற்கள் இடித்துத் தள்ளப்பட்டது பக்தர்கள அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது குறித்து பக்தர்கள் பலரும் மனம் குமைந்து புலம்பி வருகிறார்கள்.

நெல்லையப்பர் கோயில்

இந்த நிலையில்  நெல்லையைச் சேர்ந்த குற்றாலநாதனிடம் பேசினோம். இவர், இந்துமுன்னணி  மாநில நிர்வாக குழு உறுப்பினர்.

அவர் நம்மிடம்,“இந்த   நெல்லையப்பர் கோயில் பாரம்பரியப் பெருமை பெற்றது.  பாண்டியர்கள் சோழர்கள் விஜயநகர அரசர்களால் இந்தக் கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.வட்டெழுத்து கல்வெட்டுக்கள் இருக்கக்கூடிய  தொன்மையான கோயில்களில் இதுவும் ஒன்று. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சைவ சமயத்தை மீட்டெடுத்த திருஞானசம்பந்தர் இந்தத் தலத்தின் மீது தனி பதிகமே  பாடியுள்ளார்.

ஞானசம்பந்தர் பாடிய அந்த பதிகம், மற்றும் மெய்கண்டார் எழுதிய சிவஞானபோதம் 12 சூத்திரங்கள் ஆகியவை 1950களில் திருப்பனந்தாள் காசி திருமடத்தின் சார்பில், வெள்ளை பளிங்குக் கற்களில் பொறிக்கப்பட்டு கோயில் பிரகார சுவரில் பதிக்கப்பட்டன.

குற்றாலநாதன்

வேறு எந்தக் கோயில்களிலும் இல்லாத நடைமுறையாக, இங்கு இந்த கல்வெட்டுகளுக்கு சாயரட்ச வேளையில் நிவேதனமும் தீபாராதனையும் செய்து வழிபடுவது வழக்கம். அதாவது சிவனுக்குரிய மரியாதையை இந்த பதிகங்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளுக்கும் பக்தர்கள் தருவார்கள்.

இந்தக் கல்வெட்டுகளை புனரமைப்பு பெயரில் சுவரில் இருந்து பெயர்த்தெடுத்து, சுக்குநூறாக உடைத்துவிட்டார்கள். அந்த சிதிலங்களை, கோயிலுக்குச் சொந்தமான தாமரைக் குளத்தில் வீசி எறிந்துவிட்டார்கள்” என்று குமுறலுடன் தெரிவித்தார் குற்றாலநாதன்.

மேலும் அவர், “கோயிலுக்கு குடமுழுக்கு செய்யும் முன்பு பாலாலயம் என்ற சடங்கு செய்யப்படும். இது மிகவும் முக்கியமானது. அதாவது கோயில் சிலைகளை மந்திரங்கள் ஓதி, உரிய முறைப்படி நகர்த்தி வைப்பது.

இது ஆன்மிக பெரியோர்கள் முன்னிலையில் நடைபெறும். 2003ம் வருடம், குடமுழுக்கு  நடந்தபோதும், பாலாலயம் செய்யப்பட்டது. அப்போது    தருமபுர சன்னிதானம் திருவாவடுதுறை சன்னிதானம் உட்பட ஆன்மிக பெரியவர்கள் வந்திருந்தனர்.

ஆனால் இந்த முறை.. கடந்த நவம்பர் 29ம் தேதி பாலாலயம் செய்தார்கள். இது குறித்து யாருக்கும் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை.  ரகசியமாக செய்துமுடித்துவிட்டது கோயில் நிர்வாகம்.

பதிகங்கள் பதிக்கப்பட்டிருந்த சுவர்

தவிர, இந்தக் கோயிலுக்கு என்று கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருக்கின்றன. அவற்றின் வருமானத்தை முறையாக வசூலித்தாலே, யாருடைய உதவியும் இன்றி குடமுழுக்கு செய்துவிடலாம். ஆனால் அந்த வருமானத்தை வசூலிப்பதில் அக்கறை காட்டாமல், வெளியில் இருந்து பலரிடமும் உதவி பெற்று குடமுழுக்கு நடத்த திட்டமிடுகிறார்கள்.

குடமுழுக்கு நடத்துவதென்றால் அதற்கென்று பக்தர்கள் கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும். அப்படி ஏதும் அமைக்காமலேயே பணிகள் நடக்கின்றன” என்று புகார் பட்டியல் வாசித்த குற்றாலநாதன், “இந்த நெல்லையப்பர் கோயிலின் செயல் அலுவலர் ரோஷினிதான் இதற்கெல்லாம் காரணம். இவர் ஒரு கிறித்துவர். விதிகளை மீறி இந்துக்கோயிலில் பணியில் இருக்கிறார். இவருக்கு கோயில் சம்பிரதாயங்கள் குறித்த கவலையே கிடையாது” என்றார் அதிரடியாக.

இந்தப் புகார்கள் குறித்து கேட்க, கோயில் செயல் அலுவலர் ரோஷினியை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “நான் தூத்துக்குடியைச் சேர்ந்த இந்து  பெற்றோருக்குப் பிறந்த இந்து பெண். எனது பெயரை வைத்து நான் வேற்று மதத்தவர் என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது.

அறநிலையத்துறையில் நான் பணியில் சேரும் முன்பே, ஆர்.டி.ஓ. மட்டத்தில் என்னைப்பற்றி விசாரித்தார்கள். தவிர, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் விசாரித்தார். பிறகுதான் பணி ஆணை எனக்கு வழங்கப்பட்டது. ஆகவே என்னை வேற்று மதத்தவர் என்று சொல்வது தவறு” என்றார்.

மேலும், “ஞானசம்பந்தர் பாடிய பதிகம், மற்றும் மெய்கண்டார் எழுதிய சிவஞானபோத சூத்திரங்கள் ஆகியவை  பொறிக்கப்பட்டது கல்வெட்டு அல்ல.  பளிங்க்குக் கற்களில் பதிக்கப்பட்டவை.

1950களில்  கோயில் பிரகார சுவற்றில் பதிக்கப்பட்ட அவை, காலப்போக்கில் பெயர்ந்து விழும் நிலையில் இருந்திருக்கின்றன. அந்தசுவரை திருப்பணிக்காக வேலை ஆட்கள் சரி செய்தபோது பெயர்ந்து விழுந்திருக்கின்றன.  அந்த கற்களின் முக்கியத்துவம் தெரியாமல் வேலை ஆட்கள், தாமரைக் குளத்தில் போட்டிருக்கிறார்கள்.

இது நடந்தபோது எனக்குத் தெரியாது. பிறகு என் கவனத்துக்கு வந்தவுடன் பதறிப்போய் அவற்றைப் பார்த்தேன். மிகவும் வருத்தமாக இருந்தது. உடனடியாக அதே இடத்தில்   வெள்ளை பளிங்குக் கற்களில் ஞானசம்பந்தர் பாடிய பதிகம், மற்றும் மெய்கண்டார் எழுதிய சிவஞானபோதம் 12 சூத்திரங்கள் பதித்து வைக்க உத்தரவிட்டிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் அவை பதிக்கப்படும்” என்றார்.

சிதறுண்ட நிலையில் பதிகக் கற்கள்

கோயிலுக்கு வருமானம் இருந்தும் வசூலிக்காமல், வெளியில் இருந்து உதவி பெற்று குடமுழுக்கு நடத்த இருப்பதாக எழுந்திருக்கும் புகார் குறித்து கேட்டபோது, “கோயிலுக்கு என்று 2900 ஏக்கர் புஞ்சை நிலம் உள்ளது. ஆனால் பெரும்பாலும் வானம் பார்த்தபூமி. மழை பொய்த்ததால் விவசாயம் இல்லை. ஆகவே நிலத்திலிருந்து கோயிலுக்கு வருமானம் இல்லை.

தவிர கோயிலுக்குச் சொந்தமான 226 கடைகள் உள்ளன. இவைகளில் பெரும்பாலும் சரியாக வாடகை வந்துவிடுகிறது. சிலர் தராத நிலையில் நீதிமன்ற நடவடிக்கை மூலம் வசூலிக்கிறோம். ஆனாலும் இந்தத் தொகை, குடமுழுக்கு செய்ய போதுமானதாக இல்லை. ஆகவே வெளியில் இருந்து உபயதாரர்கள் கோயில் புனரமைப்புக்கு உதவுகிறார்கள்” என்றார்.

பாலாலயம் விவகாரம் குறித்து கேட்டதற்கு, “பாலாலயத்தைப் பொறுத்தவரை,  உயரதிகாரிகளிடமிருந்து உத்தரவு எதிர்பார்த்து காத்திருந்தோம். அந்த நேரத்தில் உயரதிகாரி விடுமுறையில் இருந்தார். அதன் பிறகு அடுத்த நிலை அதிகாரிகளே பாலாலயம் செய்ய உத்தரவிடலாம் என்று வழிகாட்டப்பட்டது. அதையடுத்து பாலாலயத்துக்கு ஏற்பாடு செய்தோம். அதனால் குறுகிய காலத்தில் அறிவிக்க வேண்டியதாயிற்று. மற்றபடி இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை” என்றார் ரோஷினி.

அடுத்ததாக அறநிலையத்துறை திருப்பணிக்கான கூடுதல் ஆணையர் கவிதாவைத் தொடர்புகொண்டு பேசினோம்.

அவர், “பதிகங்கள் பதிக்கப்பட்ட பளிங்குக் கற்கள் உடைக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்டிருக்கிறேன். மற்றபடி குடமுழுக்குக்காக நடக்கும் புனரமைப்பு பணிகள் முழுதும் சட்டப்படி சிறப்பாக நடக்கின்றன” என்றார் சுருக்கமாக.

–    டி.வி.எஸ். சோமு