சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தேவருக்கு அணிவிக்கப்படும் தங்கக்கவசத்தை வங்கியில் இருந்து பெற்றுக்கொண்டார். தொடர்ந்து,  அந்த தங்க கவசம் போலீஸ் பாதுகாப்போடு மதுரையில் இருந்து பசும்பொன் கொண்டு செல்லப்பட்டு தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மறைந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா ஆண்டு தோறும் அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் விமரிசையாக நடைபெறும். மேலும் மதுரை  கோரிப்பாளையம் உள்பட  அவரது சிலைகள் உள்ள பகுதிகளில் தேவர் சமூகத்தினர் மூளைப்பாரி எடுத்து, பொங்கலிட்டு  ஆடம்பரமாக மரியாதை செய்வது வழக்கம். இதனையொட்டி  பல மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

பசும்பொன்னில் தேவர் நினைவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு,  கடந்த 2014 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 13 கிலோ எடை கொண்ட தங்க கவசம் அதிமுக சார்பில்  வழங்கினார்.  இந்த தங்கக்கவசம் ஆண்டுதோறும், தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை சமயத்தில் மட்டும் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டு  குரு பூஜை முடிவடைந்ததும், அதை மதுரையில் உள்ள வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

இந்த தங்கக்கவசத்தை ஒவ்வொரு ஆண்டும் அதிமுக சார்பாக அந்த கட்சியின் பொருளாளராக இருக்கக்கூடியவர்கள்  பெற்று,  தேவர் நிர்வாகத்திடம் ஒப்படைப்பார்கள்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிமுகவில் ஏற்பட்ட மோதல் காரணமாக நீதிமன்ற உத்தரவின் படி தங்க கவசம் வங்கி நிர்வாகம் சார்பாக நேரிடையாக பசும்பொன் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அதிமுக எடப்பாடி கைக்கு சென்றுவிட்ட நிலையில், அவரது ஆதரவாளரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் மூலம் தங்கக்கவசம் பெறப்பட்டு, பசும்பொன் கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக, தேவர்,  தங்க கவசத்தை பெறுவதற்காக மதுரையில் உள்ள வங்கிக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வந்தார். அவருடன் அதிமுகவை சேர்ந்த 10 முக்கியஸ்தர்களும் வந்திருந்தனர்.  இதைத்தொடர்ந்து, தங்க கவசம் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது.

 அதனை பெற்றுக்கொண்ட அவர் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் தங்க கவசத்தை வழங்கினார்.